தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாத மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் உள்ளிட்ட 70 சதவீத வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றி உள்ளது.

2014 ல் கருப்பு பணத்தை ஒழிப்போம் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ. 15 லட்சம் வரவு வைப்போம் என்று கூறிய வாக்குறுதிகள் என்ன ஆனது ?

உள்துறை அமைச்சர் அமித்ஷா-வே அதனை “ஜூம்லா” வெற்று வாக்குறுதிகள் என்று தெரிவித்ததை மறந்து விட்டீர்களா? என்று நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் திருச்சி சிவா எம்.பி. கேள்வி எழுப்பினார்.

விலைவாசி உயர்வு குறித்து மக்களவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய நிர்மலா சீதாராமன், “மத்திய அரசு பெட்ரோல் விலையை குறைத்த போதும் தமிழகத்தில் திமுக அரசு பெட்ரோல் விலையை குறைக்கவில்லை, மாநிலத்தில் விலைவாசி உயர்வுக்கு திமுக அரசு தான் காரணம்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், ராஜ்ய சபாவில் இன்று பேசிய திருச்சி சிவா எம்.பி. விலைவாசி உயர்வு குறித்த விவாதம் நடைபெறும் நிலையில், மாநிலங்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இல்லாதது வருத்தமளிக்கிறது என்று தெரிவித்தார்.

மேலும், திமுக ஆட்சியில் பெட்ரோல் விலை ரூ. 3 குறைக்கப்பட்டது என்று சுட்டிக்காட்டிய அவர் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில் மோடி ஆட்சியில் இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது.

ஜிஎஸ்டி என்ற பெயரில் சாமானிய ஏழை மற்றும் நடுத்தர மக்களை உறிஞ்சிப் பிழைக்கிறது மத்திய அரசு. அவர்களுக்கான உணவில் குறிப்பாக பெண்கள் ஊட்டச்சத்து குறைவாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றது என்று மத்திய அரசை குற்றம் சாட்டினார்.