சென்னை: செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு உணவு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது. தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகளான இட்லி, தோசை உள்பட 700 வகையான உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன.
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று ( ஜூலை 28ம் தேதி ) முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இதில் 189 நாடுகளில் இருந்து சுமார் 2,000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்குபெறுகின்றனர். இந்தியாவின் சார்பில் 30 பேர் 6 குழுக்களாக விளையாடவுள்ளனர். இந்த போட்டி மற்றும் நிகழ்ச்சியை பொதுமக்கள் தூர்தஷன் சேனலில் நேரலையாக காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செஸ் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு தேவையான உணவுக்கான மெனுவை தமிழகஅரசு இறுதி செய்துள்ளது. அதன்படி, இந்த விருந்தில் 77 மெனு கார்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 53 மெனு கார்டுகள் இறுதி செய்யப்பட்டு உள்ளது. அதில், சிற்றுண்டிகள் மற்றும் சாஸ்கள் உள்பட 3500-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. மேலும், 700 உணவு வகைகள் இடம்பெற்றுவுள்ளது. இதில் தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகள், இட்லி, தோசை உள்பட ஐரோப்பிய உணவுகள் சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த பிரமாண்ட உணவு ஏற்பாடுகளை இந்தியாவின் முன்னணி சமையற்கலைஞரான சென்னையைச் சேர்ந்த ஜி.எஸ். தல்வார் ஏற்பாடு செய்துள்ளார்.
ஒருநாள் அளிக்கப்படும் உணவு வகைகள் மறுநாளும் வராமல் இருக்க ஒவ்வொரு நாளும் புதிய வகை மெனுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. செஸ் போட்டிகள் முடியும் வரை அதாவது ஆகஸ்ட் 10-ம் தேதி வரை செஸ் திருவிழாவோடு சேர்த்து இந்த உணவுத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.
இந்த உணவு ஏற்பாடுகளின் சுகாதாரத்தையும் பாதுகாப்பையும் கவனிக்கத் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் 2022: இன்று ஜிம்பாப்வே அணியுடன் இந்திய அணி மோதல் – போட்டி அட்டவணை முழு விவரம்