சென்னை: அடையாறு ஆற்றங்கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு சென்னை உயர்நீதி மன்றத்தில் தெரிவித்து உள்ளது.
மழைகாலத்தின்போது, செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பினால், அதன் உபரிநீர் அடையாற்றில் திறந்துவிடப்படும். ஆனால், ஆற்றுக்குள் பல ஆக்கிரமிப்பாளர்கள் குடிசை கட்டி வாழ்ந்து வருவதால், ஏரியில் திறந்துவிடப்படும் தண்ணீர், ஊருக்குள் புகுந்து பேரழிவை ஏற்படுத்துகிறது. இதை தடுக்கும் வகையில், அடையாறு ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி கொரட்டூரைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி விளக்கம் அளித்தார். கூவம் மறுசீரமைப்பு அறக்கட்டளை மூலம் மறு சீரமைப்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தடை உத்தரவு இல்லாத இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருவதாகவும் கூறினார்.
இதையடுத்து நிலுவையில் உள்ள ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்குகளோடு இந்த வழக்கையும் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்டு 8ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.