ஆசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு செய்து கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி குறித்து மூன்று நாட்களுக்குப் பின் வாய்திறந்தார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
ஊழலுக்கு எதிரான அரசு திரிணாமுல் காங்கிரஸ் அரசு அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மீதான இந்த ஊழல் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது இதில் அவர் மீதான குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால் அவருக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்படும்.
இதுகுறித்து கொல்கத்தாவில் இன்று செய்தியாளர்களிடையே பேசிய மம்தா, “இந்த ஊழல் விவகாரத்தில் என்னை தொடர்ப்பு படுத்தி பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றன. நான் அரசியலில் இல்லாவிட்டால் இப்படி பேசுவதற்காக அவர்கள் நாக்கை அறுத்திருப்பேன்” என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
மேற்கு வங்க தொழில் துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி இதற்கு முன் கல்வி இலாகாவில் இருந்த போது ஆசிரியர் பணி நியமனத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அதன்மூலம் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது இதில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள பணம், நகை மற்றும் சொத்து உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டது.
பார்த்தா சாட்டர்ஜி-க்கு நெருக்கமான நடிகை அர்பிதா முகர்ஜி வீட்டில் இருந்து சுமார் 21 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அர்பிதா முகர்ஜி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி-க்கு உடல்நலம் குன்றியதால் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்று காலை ஏர்-ஆம்புலன்ஸ் மூலம் செல்லப்பட்டார்.
அங்கு அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டதால் இன்று மாலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், அமைச்சர் கைது விவகாரம் குறித்து மூன்று நாட்களுக்குப் பிறகு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதிலளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.