புதுடெல்லி:
இந்தியாவின் 15வது குடியரசு தலைவராக திரவுபதி முர்மு இன்று பதவி ஏற்க உள்ளார்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் இன்றுடன் முடிகிறது. இதையடுத்து சமீபத்தில் நடந்த தேர்தலில், மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட திரவுபதி முர்மு அமோக வெற்றி பெற்றார். மொத்தம் 6.76 லட்சம் ஓட்டுகளுடன், அதாவது 64 சதவீத ஓட்டுகள் பெற்று அவர் வென்றார். இதைத் தொடர்ந்து, நாட்டின் 15வது குடியரசு தலைவராக அவர் இன்று பதவியேற்க உள்ளார்.
பாராளுமன்ற மைய மண்டபத்தில் காலை 10.15 மணிக்கு நடக்கும் விழாவில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இதைத் தொடர்ந்து, 21 குண்டுகள் முழங்க அவருக்கு மரியாதை செலுத்தப்படும்.அதன் பின் பாராளுமன்றத்தில் அவர் உரையாற்றுவார்.
நாடு சுதந்திரம் அடைந்தபின் பிறந்த ஒருவர் ஜனாதிபதியாக பதவியேற்பது இதுவே முதல் முறை. மேலும் மிகவும் இளம் வயதில் பதவியேற்கும் பெருமையையும் பெறுகிறார். இரண்டாவது பெண் ஜனாதிபதியாக அவர் விளங்குவார் என்பது ம் குறிப்பிடத்தக்கது.