ரஷ்ய தலைநகர் மாஸ்கோ-வில் ரோபோ-வுடன் செஸ் விளையாடிய ஏழு வயது சிறுவனின் கை விரல் முறிந்தது.

மாஸ்கோவில் உள்ள 9 வயதுக்கு குறைவான 30 சிறந்த செஸ் விளையாட்டு வீரர்களில் ஒருவரான 7 வயதான சிறுவன் கிறிஸ்டோபர் அங்கு நடைபெற்ற போட்டி ஒன்றில் கலந்துகொண்டார்.

மூன்று வீரர்களுடன் விளையாடி முடித்த ரோபோ நான்காவதாக சிறுவன் கிறிஸ்டோபரை எதிர்கொண்டது. சிறப்பாக விளையாடி வந்த கிறிஸ்டோபர் கை திடீரென்று ரோபோவின் இரும்பு கரத்துக்குள் சிக்கியது.

சிறுவனின் அலறல் சத்தத்தைக் கேட்டு அருகில் நின்றிருந்தவர்கள் அவருக்கு உதவினர் ஆனால் அதற்குள் அவரது ஆள்காட்டி விரலை ரோபோ வெகுவாக அழுத்தியதால் எலும்பு முறிவு ஏற்பட்டு கட்டு போடப்பட்டுள்ளது.

கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக செஸ் விளையாட்டில் ரஷ்யர்கள் கொடிகட்டி பறந்து வரும் நிலையில் அங்குள்ள சிறுவர்களுக்கு செஸ் விளையாட்டு என்பது கைவந்த கலையாக உள்ளது.

ரோபோ தனது நகர்தலை முடிக்க தேவையான கால அவகாசத்தை கிறிஸ்டோபர் வழங்காமல் துரிதமாக தனது காயை நகர்த்தியதாலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் சிறுவர்களுக்கு ரோபோவுடன் விளையாடுவது குறித்த பயிற்சியும் தரப்படும் என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.