சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் நடிப்பில் மெகா பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் தி லெஜெண்ட் திரைப்படம் ஜூலை 28 அன்று பிரம்மாண்ட ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

ஜே.டி. – ஜெர்ரி இயக்கி இருக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

ஊர்வசி ரெளட்டாலா, விஜயகுமார், பிரபு, விவேக், சுமன், நாசர், லிவிங்ஸ்டன், யோகிபாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பான் இந்திய படமாக உருவாகி உள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது உலகெங்கும் திரையிட தயாராகி வருகிறது.

இந்தப் படத்தின் இந்தி உரிமையை நம்பிராஜனின் கணேஷ் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறது.

ஏற்கனவே இந்தப் படத்தை தமிழ்நாட்டில் திரையிடும் உரிமையை அன்புச்செழியன் வாங்கி இருக்கும் நிலையில், தமிழகம் முழுவதும் 800 திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்.

தமிழ்நாடு நீங்கலாக தமிழில் மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் திரையிடும் உரிமையை ஏ.பி.இன்டர்நேஷனல் நிறுவனம் வாங்கியுள்ளது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளியிடும் தெலுங்கு உரிமையை ஸ்ரீலட்சமி மூவீஸ் நிறுவனமும், கேரளாவில் மலையாளத்தில் வெளியிடும் உரிமையை மேஜிக் பிரேம்ஸ் நிறுவனமும் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.