சென்னை: டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெற திட்டம் வகுக்க தமிழகஅரசுக்கு மேலும் ஒரு மாதம் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மலைவாசஸ்தலங்களில் குடிகாரர்கள் குடித்து வீட்டு வீசிச்செல்லும் காலி மதுபாட்டில்களால் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், காலி மதுபாட்டில்களை திரும்ப பெற நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு ம் தமிழகஅரசுக்கு உத்தரவிட்டது. இந்த திட்டம் முதல்கட்டமாக நீலகிரியில் அமல்படுத்தப்பட்ட நிலையில், தொடர்ந்து கொடைக்கானலில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டத்தை தமிழகஅரசு முழுவதும் நடைமுறைப்படுத்த திட்டம் வகுக்க உத்தரவிட்டது.
இந்தநிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மலைவாசஸ்தலங்களில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் மூலம் 71 சதவீத பாட்டில்கள் திரும்பப்பெறப்பட்டுள்ளதாகவும், பாட்டில்களை திரும்ப ஒப்படைக்காததால் கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகை ஒரு கோடியே 81 லட்சம் ரூபாய் உள்ளது என டாஸ்மாக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்துவதை பொறுத்தவரை, 5000க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளதால், காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான திட்டத்தை வகுக்க மூன்று மாத அவகாசம் வேண்டும் எனவும் டாஸ்மாக் தரப்பில் கோரப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஒரு மாதத்தில் இது சம்பந்தமான திட்டத்தை வகுக்க வேண்டும் எனவும், மேற்கொண்டு அவகாசம் வழங்கப்பட மாட்டாது எனவும் கூறி, விசாரணையை ஆகஸ்ட் 18ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அதேசமயம், திரும்பப் பெறப்பட்ட காலி பாட்டில்களை அப்புறப்படுத்துவதற்கு பதிலாக மதுபானம் சப்ளை செய்யும் நிறுவனங்களே அந்த பாட்டில்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என நிபந்தனை விதிக்கலாம் எனத் தெரிவித்த நீதிபதிகள், பாட்டில்கள் திரும்ப ஒப்படைக்காத தால் வசூலாகியுள்ள தொகை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.
[youtube-feed feed=1]