மேட்டூர்: காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணையின் நீர்மட்டம் 114 அடியை தாண்டி உள்ளது. இதனால், காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 20ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணை இன்று நள்ளிரவு அல்லது நாளை முழு கொள்அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி உள்ளதால் உபரி நீர் காவிரியில் திறந்துவிடப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து நேற்று காலை வினாடிக்கு 1,20,000 கன அடி அளவிற்க்கு காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டது. நேற்று மாலை 4.30 மணி முதல் வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அணைக்கு வினாடிக்கு 73 ஆயிரத்து 29 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் மேட்டூர் அணையை ஒட்டி அமைந்துள்ள அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையங்கள் வழியாக வெளியேற்றப்படுகிறது. இந்த மின் நிலையங்கள் வழியாக வெளியேறும் தண்ணீரை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி 200 மெகாவாட் மின்சாரம் இந்த 2 மின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், தற்போது,  மேட்டூர் அணைக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 9 ஆயிரம் கன அடி வீதம் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது.

இன்று மதியம் நிலவரப்படி, அதாவது, பகல் 12 மணிக்கு 113.96 அடியிலிருந்து 114.81 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து  அதிகரித்து வருவதால் இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் மேட்டூர் அணை நிரம்பும் வாய்ப்பு உள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து 16 கண் உபரி நீர் போக்கி வழியாக எந்த நேரத்திலும் உபரிநீர் திறக்கப்படலாம் என்பதால் அதற்கான முன்னேற்பாட்டிற்கான பணிகளில் நீர்வளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேவேளையில், கேரளம் மாநிலம் வயநாட்டிலும், கர்நாடகம் மாநிலம் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளிலும் மீண்டும் தீவிரமடைந்த தென்மேற்கு பருவமழையால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.