சென்னை: தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா குறித்த தகவல் பெறும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) எழுப்பிய  கேள்விக்கு, இப்போதைக்கு தகவல் தர முடியாது ஆளுநர் மாளிகை பதில் தெரிவித்து உள்ளது.

தமிழகஅரசு சட்டமன்றத்தில் இயற்றி நீட் விலக்கு மசோதா உள்பட பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் இழுத்தடித்து வருகிறார். இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநரை பலமுறை நேரில் சந்தித்து வலியுறுத்தியும், அமைச்சர்கள் மூலமாகவும், தமிழகஅரசின் மசோதாக்களுக்கு விரைந்து அனுமதி வழங்கும்படியும் வலியுறுத்தி வருகிறது. இருந்தாலும், பல மசோதாக்களுக்க ஆளுநர் அனுமதி வழங்க மறுத்து வருகிறார்.

ஆனால் நீட் மசோதா விஷயத்தில் மட்டும் நீதிமன்றம் தலையிட்டதால்,  நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறும் வகையில், மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்பட்டத. இதை  முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

இந்த நிலையில்,  நீட் விலக்கு மசோதாவின் நிலை தொடர்பான தகவலை அளிக்க வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அனுப்பி இருந்தார். அவரது மனுவுக்க கடந்த ஜூலை 11-ம் தேதி ஆளுநர் மாளிகை சார்பில் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் மாளிகை அளித்துள்ள பதிலில், “மசோதா, சம்பந்தப்பட்ட அதிகாரியின் பரிசீலனையில் உள்ளது. அதனால், மனுதாரர் கோரியத் தகவலைத் தெரிவிக்க இயலாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.