கிருஷ்ணகிரி:
ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் 2வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மற்றும் கேரள காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் நேற்று மதியம் 12 மணியளவில் தமிழக, எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லை வந்தடைந்தது. இதனால் ஒகேனக்கல் ஐந்தருவி, பெரியபாணி, சினி அருவி ,ஐவர் பானி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்த வண்ணமாக உள்ளதால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தடைவிதித்துள்ளார்.