அஇஅதிமுக-வில் உள்ள 2665 பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் 250 செயற்குழு உறுப்பினர்கள் தவிர மற்றவர்கள் யாரும் உள்ளே நுழைய முடியாதபடி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலசில் நாளை காலை 9 மணிக்கு நடைபெற இருக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வெளிமாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பலரும் இன்றே சென்னை வர துவங்கி உள்ளனர். முன்னாள் அமைச்சர் எஸ்.டி.கே.ஜக்கையன் தலைமையில் தேனி மாவட்ட நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமியை இன்று சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இந்த நிலையில், பொதுக்குழு நடைபெறும் அரங்கிற்குள் செல்லும் நுழைவாயிலில் தானியங்கி தடுப்புடன் கூடிய வருகை பதிவு இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
2665 பொதுக்குழு உறுப்பினர்கள் செல்ல 12 தானியங்கி நுழைவு இயந்திரங்களும் 250 செயற்குழு உறுப்பினர்கள் செல்ல 4 தானியங்கி நுழைவு இயந்திரங்கள் என மொத்தம் 16 இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் 23 ம் தேதி நடைபெற்ற அஇஅதிமுக பொதுக்குழு கூட்டம் முதல் முறையாக தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட நிலையில், இந்த முறை நிருபர்கள் மற்றும் தொலைக்காட்சி நிருபர்களுக்கான அனுமதி குறித்து எந்த விவரமும் வெளியாகவில்லை.
காலையில் கூட்டம் தொடங்க இருக்கும் நிலையில் இந்த கூட்டம் தொடர்பான வழக்கின் தீர்ப்பும் நாளை காலை 9 மணிக்கு வெளியாக உள்ளது.
கூட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்து வரும் எடப்பாடி தலைமையிலான அதிமுக-வினர் தீர்ப்பு தங்களுக்கு எதிராக வர வாய்ப்பில்லை என்று கூறிவருகின்றனர்.
அதேவேளையில், இந்த கூட்டத்திற்கு இதுவரை தங்களுக்கு முறையான அழைப்பு இல்லை என்று கூறிவரும் ஓ.பி.எஸ். தரப்பினர் இந்த கூட்டத்தில் ஓ.பி.எஸ். பங்கேற்பது குறித்தோ அல்லது எவ்வளவு நேரம் அங்கிருப்பார் என்பது குறித்தோ அல்லது எந்தமாதிரியான சமரச திட்டங்களுக்கு சம்மதம் தருவார் என்பது குறித்தோ வாய்திறக்க மறுத்துவருகின்றனர்.
போலி அட்டைகளுடன் கடந்த முறை ஏராளமானோர் பொதுக்குழுவில் கலந்து கொண்டதாக ஓபிஎஸ்- ஈபிஎஸ் தரப்பினர் மாறிமாறி குற்றம் சுமத்தியதை அடுத்து இதேபோன்ற பிரச்சனையை தவிர்க்க உறுப்பினரின் பெயர், வயது, புகைப்படம், எந்த மாவட்டத்தை சேர்ந்தவர், எந்த பகுதியை சேர்ந்தவர் என்ற முழு விவரமும் இடம்பெற்றிருக்கும் வகையில் ஆர்எஃப் ஐடி என்ற நுழைவு அனுமதி அடையாள அட்டை வழங்கப்பட்டிருக்கிறது.