சென்னை: கடந்த 10ஆண்டு காலமாக தொடர்ந்த, பள்ளிகளில் மாணாக்கர்களின் வேலைவாய்ப்பு பதிவு செய்யும் நடைமுறையை ரத்து செய்வதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது. இது மாணாக்கர்களிடையேயும், பெற்றோர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேல்நிலைப் பள்ளி முடித்தவர்கள், உயர்கல்விக்காக கல்லூரிக்கு செல்லும் நிலையில், அவர்கள் அரசு வேலைவாய்ப்புக்கு, அரசு வேலைவாய்ப்பு துறையில் பதிவு செய்வதற்கு, குறிப்பிட்ட மாவட்ட அலுவலகங்களுக்கு சென்று அலைவதை தடுக்கும் வகையில் கடந்த 2011ம் ஆண்டு அதிமுக அரசு 10ம் வகுப்பு, பிளஸ்2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் தங்களது பள்ளிகள் மூலம் தங்களது கல்வித் தகுதிகளை நேரடியாக வேலை வாய்ப்புத் துறை இணையதளத்தில் பதிவு செய்ய உதவி செய்துவந்தது. இதனால், அனைத்து மாணாக்கர்களும், எந்தவித சிரமுமின்றி, எளிதான முறையில் வேலைவாய்ப்புத்துறையில் தங்களை பதிவு செய்துகொண்டனர். இது மாணாக்கர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த நிலையில், பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு செய்யப்பட்டு வந்த நடைமுறை ரத்து செய்யப்படுவதாக தமிழகஅரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு செய்யும் நடைமுறை ரத்து செய்யப்படுகிறது. மேலும், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகள் http://www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் வேலைவாய்ப்புக்குப் பதிவு செய்துகொள்ளலாம்.
வேலைவாய்ப்புப் பதிவு, கூடுதல் பதிவு, புதுப்பித்தல் உள்ளிட்டவற்றை இ–-சேவை மையங்களிலும் பதிவு செய்துகொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளிலேயே வேலைவாய்ப்புத்துறைக்கு பதிவு செய்யும்போது, மாணாக்கர்களின் அனைத்துவிதமான பதிவேடுகளும், அவர்களிடம் இருப்பதால் பதிவு செய்வது எளிதாக இருந்தது. மேலும், கணினி, இணையசேவை இல்லாத மாணவர்களுக்கு இது பேருதவியாக அமைந்தது. அதற்கான எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.
இந்த நிலையில், தற்போது தமிழகஅரசு, பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு செய்யும் நடைமுறை ரத்து செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.