சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்கு கொடுத்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகை சாந்தினி வழக்கை வாபஸ் பெற்றதால், மணிகண்டன் மீதான வழக்கை  சென்னை  உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததும், முதன்முதலாக அதிமுக அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிகழ்வு பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியின்போது தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சராக இருந்தவர் முன்னாள் அமைச்சர் மணிகண்டன். இவர் நடிகை சாந்தினி என்பவரை  திருமணம் செய்துகொள்வதாக கூறி  ஏமாற்றியதாகவும், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும், 3 முறை அவரால், கட்டாய கருக்கலைப்பு செய்ததாகவும் பரபரப்பு புகார்   அளித்திருந்தார்.

இந்த புகாரை பதிவு செய்த   அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர், மணிகண்டன் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, முன்ஜாமின் கோரிய மனுத்தாக்கல் செய்த மணிகண்டன் தலைமறைவானார். இதற்கிடையில் அவரது மனுவும் தள்ளுபடி செய்யப்ப்டட நிலையில், கடந்த 2021 ஆண்டு  ஜூன் 20ம் தேதி பெங்களூருவில் வைத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர்,  2021  ஜூலை 7ம் தேதி அவருக்கு நிபந்தனை  ஜாமீனில் வெளியே வந்தார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மணிகண்டனுக்கு   சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சாந்தினி மேலும் ஒரு வழக்கு தொடர்ந்த நிலையில், வழக்கு விசாரணையை குறிப்பிட்ட காலத்திற்குள்  நடத்தி முடிக்க  வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந் தார்.

 இந்த வழக்கைவிசாரித்த  உச்சநீதிமன்றம் ,  இந்த மனு மீது முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் 6 வார காலத்தில் பதில் அளிக்குமாறு  நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார்.

இந்த நிலையில்  வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மணிகண்டன் மீதான புகாரை திரும்ப பெறுவதாகவும், இருவரும் சமரசம் செய்துகொண்டதாகவும் சாந்தினி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்று, அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை சாந்தினி திடீரென வழக்கை வாபஸ் பெற்றுள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.