சென்னை: சென்னை மாநகர பகுதிகளில், குற்றச்செயல்களில் ஈடுபட்ட 189பேரை கடந்த ஒருவாரத்தில் கைது செய்த சென்னை காவல்துறை யினர், அதில் 9 பேரை குண்டாஸ் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டு உள்ளார்.
சென்னையில் அதிகரித்து வரும் குற்றச்செயல்களை தடுக்க காவல்ஆணையர் சங்கர் ஜிவால் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் விற்பனை கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், தொடர் வழிப்பறி, கொள்ளை, நில அபகரிப்பு, மணல், உணவு பொருட்கள் கடத்தல், கொலை முயற்சியில் ஈடுபடுவோர்களும் கண்காணிக்கப்பட்டு, நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதன்படி, கடந்த ஒரு வாரத்தில், கொலை முயற்சி, சங்கிலி பறிப்பு, பண மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 189 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் மயிலாப்பூர் பிள்ளையார் கோவில் தோட்டத்தைச் சேர்ந்த சீனு என்கிற சீனிவாசன் (52), கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகர் மெயின் ரோடு ஜனா (எ) ஜனார்த்தனம் (32), ஈக்காட்டு தாங்கல் 3-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த அரவிந்த் சுப்பிரமணியன் (36) மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இதே போல ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த விக்கி (26), திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன்குமார் (41), ஸ்டான்லி (26), ஆந்திர மாநிலம் கோதாவரியைச் சேர்ந்த பேடுரி சீனு, பெரியமேடு பரத் என்கிற மூக்குபரத் (25), விஜயரங்கன் (24) உள்ளிட்ட 9 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.