சென்னை: அதிமுக பொதுக்குழு நாளை மறுதினம் (திங்கட்கிழமை- 11 ஆம் தேதி அன்று காலை 9. 15மணிக்கு தொடங்கப்பட இருக்கும் நிலையில், காலை 9மணிக்கு பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்து உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை இரவோடு இரவாக விசாரித்து தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம், இந்த முறை, சர்ச்சைக்குரிய வகையில், பொதுக்குழு கூட இருக்கும நேரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. நீதிபதிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் தகுந்தவாறு சட்டங்களும், அதில் உள்ள ஷரத்துக்களும், தீர்ப்புகளும் மாறுமோ என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றை தலைமை விவகாரம் உச்சம்பெற்றுள்ள நிலையில், ஜூலை 11ந்தேதி அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கை கடந்த இரு நாட்களாக (7, 8ந்தேதி) சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து. இந்த வழக்கில், இரு தரப்பினரும் தங்களது வாதங்களை சமர்ப்பித்தனர். அனல் பறக்கும் விவாதம் நடத்தினர். விசாரணையின்போது, வழக்கமாக நடைபெறும் பொதுக்குழுவிற்குத் தான் 15 நாட்களுக்கு முன்பாகவே பொதுக்குழு உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். ஆனால் தற்போது நடைபெறுவது சிறப்பு பொதுக்குழு. அதனால் பதினைந்து நாட்களுக்கு முன்னதாக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தெரிவித்துவிட வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்று எடப்பாடி தரப்பு வாதிட்டது.
அடுத்து வாதிட்ட ஓபிஎஸ் தரப்பு, ‘’இரு பதவிகளும் காலியாக உள்ளதாக முன்வைக்கப்பட்ட வாதங்கள் ஏற்றுக் கொள்ளத் தக்கது அல்ல. கட்சியின் நிறுவனர் எம் ஜி ஆர் இறந்த பின்னர் என்ன ஆனது என்பது குறித்து இபிஎஸ் தனது மனுவில் விளக்கவில்லை. தலைவர்கள் உயிருடன் இல்லாதபோதுதான் பதவி காலி என்று கருத முடியும். அதிமுகவை பொறுத்த வரைக்கும் 1987 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆம் ஆண்டு வரைக்கும் அப்படி ஒரு நிலை இருந்தது .
சிறப்பு பொதுக்கூட்டத்திற்கு 15 நாட்கள் முன்பு நோட்டீஸ் அனுப்ப தேவையில்லை என்று இபிஎஸ் தரப்பில் சொல்கிறார்கள். ஆனால் சிறப்பு பொதுக்குழுவாக இருந்தாலும் வழக்கமான பொதுக்குழுவாக இருந்தாலும் கட்சி விதிப்படி ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் தான் கூட்ட வேண்டும் என வாதிட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் வரும் திங்கட்கிழமை காலையில் 9 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார்.
அதிமுக பொதுக்குழு திங்கட்கிழமை காலையில் 9.15க்கு பொதுக்குழு தொடங்கப்பட உள்ளதால், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடை பெற்று வருகிறது. இந்த நிலையில், பொதுக்குழு கூடுவதற்கு சுமார் 15 நிமிடங்களுக்கு முன்னதாக தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
உயர்நீதிமன்ற நீதிபதியின் இந்த அறிவிப்பு காரணமாக, அதிமுக பொதுக்குழு கூடுமா என்ற சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. மேலும் நீதிபதியின் இந்த உத்தரவும் விமர்சனங்களை எழுப்பி உள்ளது.