திருவண்ணாமலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 2வது நாளாக திருவண்ணாமலையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் ரூ.70.27 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்ததுடன் ரூ.340.21 கோடி மதிப்பீட்டிலான 246 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

திருவண்ணாமலையில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.70.27 கோடி செலவில் 91 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்து, திருவண்ணாமலை நகராட்சியில் புதிய பேருந்து நிலையம் உட்பட ரூ.340.21 கோடி மதிப்பீட்டிலான 246 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

2நாள் பயணமாக திருவண்ணாமலையில் முகாமிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை  கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள சோமாசி பாடி புதூர் கிராமத்தில் வசிக்கும் மனவளர்ச்சிக்குன்றிய மாணவ வீட்டிற்கு சென்று அவருக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கி நலம் விசாரித்தார். பின்னர் அவர் ஆராஞ்சி கிராமத்தில் நடந்த 2 லட்சமாவது இல்லம் தேடி கல்வி மையத்தை தொடங்கி வைத்தார். மாணவர்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க தொடர் வாசிப்பு போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாவட்டங்கள் மற்றும் வட்டாரங்களுக்கு முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசு வழங்கினார். அவர் புகைப்பட விளக்க புத்தகத்தை வெளியிட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெற்றுக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில், திருவண்ணாமலை பெரிய தெருவில் சிவாச்சாரியார்களுக்கு ஆடைகளை வழங்கினார்.  தொடர்ந்து,  திருவண்ணாமலை ஈசானிய மைதானம் அருகே அண்ணா நுழைவு வாயில் மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார். தொடர்ந்து இரவு அங்கு நடை பெற்ற  தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

 அதையடுத்து இன்று 2-வது நாளான இன்று காலை திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பிறகு நகராட்சி மேல்நிலைப்பள்ளி எதிரே நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டு 1லட்சத்து 71ஆயிரத்து 169 பயனாளிகளுக்கு ரூ.693.02 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த விழாவில் 91 முடிவுற்ற புதிய கட்டிட பணிகளை திறந்து வைத்தார். மேலும் 246 புதிய கட்டிட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் பிச்சாண்டி, திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டன. விழாவையொட்டி திருவண்ணாமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.