டெல்லி: நூபுர் சர்மா தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார். அவர்  நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், அவரது பேச்சால்தான் உதய்ப்பூர் படுகொலை சம்பவம் நடைபெற்றுள்ளதாக உச்சநீதிமன்றம் காட்டம் தெரிவித்து உள்ளது. மேலும், இதுதொடர்பான விவாதத்தை நடத்திய தொலைக்காட்சியையும் கடுமையாக கண்டித்துள்ளது.

நபிகள் நாயகம் மற்றும் முஸ்லிம் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் தொலைக்காட்சி நடத்திய விவாதம் ஒன்றில் கருத்து தெரிவித்ததற்காக பாரதியஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் நூபுர்ஷர்மாவுக்கு எதிராக முஸ்லிம்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்தனர். இதை யடுத்து, அவரை பாஜக இடைநீக்கம் செய்து, அவரது கருத்து தவறு என விளக்கம் அளித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக முஸ்லிம்கள் பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்ட நிலையில், பல இஸ்லாமிய நாடுகளும் இந்தியாவுக்கு தங்களது அதிருப்திகளை பதிவுசெய்தன. மேலும் நூபுர்சர்மா மீது எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் பல மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தி நூபுர் சர்மா வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், தான், தொடர்ந்து உயிர் அச்சுறுத்தல்களை சந்தித்து வருவதால்,  தனது சர்ச்சைக்குரிய கருத்துக்காக பல மாநிலங்களில் தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட அனைத்து எஃப்ஐஆர்களையும் விசாரணைக்காக டெல்லிக்கு மாற்றக் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனுமீது இன்று விசாரண நடைபெற்றது. விசாரணையின்போது, நுபுர் ஷர்மா தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார் என்று உச்ச நீதிமன்றம் சாடியது.

நூபுர் ஷர்மாவின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மனிந்தர் சிங், அவர் கருத்துக்கு மன்னிப்பு கேட்டு, கருத்துகளை வாபஸ் பெற்றதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஆனால், அதை ஏற்காத உச்சநீதிமன்றம், அவர் தொலைக்காட்சிக்கு சென்று நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் என்று கண்டித்த உச்சநீதிமன்றம், அவரது கருத்தும்,  தளர்ந்த நாக்கும் ஒட்டுமொத்த நாட்டையே தீயில் ஆழ்த்திவிட்டதாக என்று கடுமையாக விமர்சித்த நீதிபதிகள்,  உதய்பூரில் தையல்காரர் கொல்லப்பட்ட துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு அவரது கோபமே காரணம் என்றும், அவர் முழு நாட்டிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளது.

மேலும், ஒரு நிகழ்ச்சி நிரலை விளம்பரப்படுத்துவதைத் தவிர, நீதித்துறையான விஷயத்தைப் பற்றி விவாதிப்பதில் தொலைக்காட்சி சேனலுக்கும் நுபுர் ஷர்மாவுக்கும் என்ன வேலை? என்றும் கடுமையாக சாடியது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின்போது, நூபுர் சர்மாவின் பேச்சால் அவருக்கு அச்சுறுத்தலா, நாட்டுக்கு அச்சுறுத்தலா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அவர் நடந்துகொண்ட விதம், அதன்பிறகு, அவரது வழக்கறிஞர்கள் சொல்வதெல்லாம் வெட்கக்கேட்து என்று விமர்சித்த துடன், ஒரு கட்சியின் செய்தி தொடர்பாளர் என்றால் எது வேண்டுமேனாலும் சொல்வதற்கு லை சென்ஸ் இல்லை என்று சாடியதுடன், நாட்டில் தற்போது நடைபெறும் நிகழ்வுக்கு நூபுர் ஷர்மாதான் பொறுப்பு, அவரும், அவரது வார்த்தைகளும் ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கி விட்டது என்று கடுமையாக விமர்சித்தனர்.

நூபுர் சர்மா விவகாரத்தில், மத்திய பாஜக அரசு முழுமையான நடவடிக்கை எடுக்காதது கடுமையான விமர்சனங்களை எழுப்பியது. இதன் காரணமாக, நூபுர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால் மீது பாஜக கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் உருவானது.  இருந்தாலும் அவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. இதையடுத்து,  மும்பை, கொல்கத்தா, தில்லி ஆகிய எதிர்க்கட்சி கள் ஆளும் மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும், நூபுர் சர்மாவைக் கைது செய்ய முடியவில்லை. அவர் தலைமறைவாக இருப்ப தாகவே கூறப்பட்டு வருகிறது.

நூபுர் சர்மாவைக் கைது செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், பல்வேறு இஸ்லாமிய அமைப்புக்களும் கோரிக்கை விடுத்து வந்தன. ஆனால், மத்திய பாஜக அரசு அலட்சியமாகவே இருந்து வந்தது. இந்த நிலையில்தான் உதய்பூர் படுகொலை சம்பவம் அரங்கேறியது. இதுகுறித்து கருத்து தெரிவித்த  ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்,  இன்று நாட்டில் பதற்றமான சூழல் நிலவுகிறது. பிரதமரும், அமித் ஷாவும் ஏன் நாட்டு மக்களுக்கு உரையாற்றவில்லை? மக்கள் மத்தியில் பதற்றம் நிலவுகிறது. பிரதமர் மோடி பொதுமக்களிடம் உரையாற்றி, இதுபோன்ற வன்முறைகளை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் மக்கள் அமைதி காக்க வேண்டும் எனவும் கூற வேண்டும். இது மிகவும் வருத்தமான சம்பவம். இது ஒரு சிறிய சம்பவம் அல்ல, நடந்தது கற்பனைக்கு அப்பாற்பட்டது, குற்றவாளிகள் தப்ப மாட்டார்கள்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.