டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவல் ஏறி இறங்கி காணப்படுகிறது. நேற்று 11,793 ஆக குறைந்த நிலையில் இன்று 14,506 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த இரு நாட்களுக்கு முன்பு 17ஆயிரத்தை தாண்டிய நிலையில், தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. அதிக பட்சமாக கேரளாவில் நேற்று 4459 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி, நேற்று மேலும் 14,506 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 3,482 பேர், கேரளாவில் 2,993 பேர், தமிழ்நாட்டில் 1,484 பேருக்கு தொற்று உறுதியானது. நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 34 லட்சத்து 33 ஆயிரத்து 345 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதிப்புடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 11,574 பேர் குணமாகி வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 28 லட்சத்து 8 ஆயிரத்து 666 ஆக உயர்ந்தது.
தற்போது நாடு முழுவதும் 99,602 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றை விட 2,902 அதிகம் ஆகும்.
தொற்று பாதிப்பால் நேற்று மேலும் 30 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் திருத்தப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்ட 12 மரணங்கள் அடங்கும். இதுதவிர நேற்று மகாராஷ்டிராவில் 5 பேர், டெல்லியில் 4 பேர், கோவாவில் 3 பேர், பீகாரில் 2 பேர், கர்நாடகா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாபில் தலா ஒருவர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,25,077 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 197 கோடியே 46 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதில் நேற்று 13,44,788 டோஸ்கள் அடங்கும்.
நாடு முழுவதும் நேற்று 4,33,659 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது இதுவரை மொத்தம் 86.19 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட் டுள்ளது. என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.