சென்னை; சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் ஆலோசனை நடத்திய நிலையில், செய்தி யாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓபிஎஸ்-ஐ கடுமையாக விமர்சித்தார். துரோகத்தின் அடையாளம் ஓ.பன்னீர்செல்வம் என்றும், துரோகம் அவரின் உடன்பிறந்த ஒன்று என கடுமையாக சாடினார்.
சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் இன்று அதிமுக தலைமை கழக நிர்வாகிகளுடன் தலைமை நிலையசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, தமிழ் மகன் உசேன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தனது கையெழுத்து இல்லாமல் அழைப்பு விடுக்கப்பட்டு நடத்தப்படும் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லாது என ஓபிஎஸ் தெரிவித்திருந்த நிலையில், அவரது எதிர்ப்பையும் மீறி அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது
ஓபிஎஸ்ஸூக்கு எதிராக இந்தக் கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வத்தை பதவி நீக்கம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியானது. ஓ.பன்னீர்செல்வம் வகிக்கும் ஒருங்கிணைப்பாளர் பதவி ஏற்கனவே காலாவதியானதாக ஈபிஎஸ் தரப்பினர் கூறிய நிலையில், பொருளாளர் பதவியில் இருந்தும் அவரை நீக்கவிருப்பதாக கூறப்பட்டது. மேலும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் இருந்தும் அவர் நீக்கப்படுவார் என்றும் கூறப்பட்டது. இது அதிமுக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், ஊருக்கு சென்றிருந்த ஓபிஎஸ், உடனே சென்னை திரும்புவதாகவும் கூறப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் , இன்று நடைபெற்ற தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் மொத்தமுள்ள 74 பேரில் 65 பேர் பங்கேற்றுள்ளனர். மேலும், “அதிமுகவை வழிநடத்த சட்ட விதிகளின்படி தலைமை நிலைய செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தை கூட்டினார். பண்ருட்டி ராமச்சந்திரன், புத்திசந்திரன், ஜஸ்டிஸ் செல்வராஜ் ஆகியோருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவர்கள் 4 பேரும் கடிதம் கொடுத்துள்ளனர். அதுபோல, திண்டுக்கல் சீனிவாசன் தான் மருத்துவமனையில் இருப்பதால் கூட்டத்திற்கு வர முடியவில்லை எனக் கடிதம் அளித்துள்ளார். இப்படியாக 5 பேர் மட்டுமே இந்த தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.” எனத் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் வரும் ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்புவது குறித்து முடிவெடுக்கப்பட்டது என்று கூறியவர், ஓபிஎஸ் பொருளாளர் பதவியில் ஓ.பன்னீர்செல்வம் நிலைப்பாரா? இல்லையா? என்பது வரக்கூடிய பொதுக்குழு கூட்டத்தில் தெரியவரும் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடன் கேள்விக்கு பதில் அளித்தவர், எந்த அதிமுக தொண்டனும் திமுகவோடு உறவு பாராட்ட மாட்டார். ஆனால், ஓ.பி ரவீந்திரநாத் ஸ்டாலினை சந்தித்து, அர்ப்பணிப்பு உணர்வோடு அரசு நடக்கிறது என்கிறார். இதை அதிமுக தொண்டன் ஏற்கமாட்டான் என்றவர், பொருளாளர் பதவியில் ஓபிஎஸ் நீடிப்பாரா, நீக்கப்படுவாரா என்பதை பொதுக்குழு முடிவு செய்யும் அதிமுகவுக்கு பல துரோகங்களை ஓபிஎஸ் செய்துள்ளார்.துரோகத்தின் அடையாளம் ஓ.பன்னீர்செல்வம் . துரோகம் அவர்களின் உடன்பிறந்த ஒன்று. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் மாறிவிட்டார்.
இவ்வாறு ஜெயக்குமார் காட்டமாக விமர்சித்தார்.