சென்னை: டெண்டர் முறைகேடு தொடர்பாக முன்னாள் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த முறைகேட்டில் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 12 அதிகாரிகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு குற்றச்சசாட்டு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு காவல்துறை ரெய்டு நடத்தி, பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியதுடன், வழக்கு தொடர்ந்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி. வேலுமணி தன்னுடைய சகோதரர்கள், உறவினர்களுக்கு டெண்டர்களை ஒதுக்கிய முறைகேடு வழக்கு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஊழல் வழக்கில் 10 வாரங்களில் விசாரணை நடத்தி இறுதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத் துறை இயக்ககத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் தன்மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி எஸ்.பி.வேலுமணி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இம்மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது டெண்டர் முறைகேடு தொடர்பாக எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கிற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மேலும் இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை, அறப்போர் இயக்கம், திமுக பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூலை 25ஆம் தேதிக்கு உயர்நீதி மன்றம் ஒத்திவைத்தது.