சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட சுமார் 1300 கிலோ கஞ்சா உள்பட போதை பொருட் களை மாநகர ஆணையர் சங்கர் ஜிவால் முன்னிலையில், தீயிட்டு அழிக்கப்பட்டது. இதன்மதிப்பு ரூ.2 கோடி என கூறப்பட்டுள்ளது.
சென்னையில், கடந்த 2019ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை சுமார் 400க்கும் மேற்பட்ட வழக்குகளின் கீழ் ஏராளமான கஞ்சா உள்பட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன்படி, ரூ.2 கோடி மதிப்பிலான 1,300 கிலோ கஞ்சாவை இன்று போலீசார் தீவைத்து அழித்தனர். சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் முன்னிலையிலும் வட சென்னை மாவட்ட இணை ஆணையர் ரம்யா தலைமையில், செங்கல்பட்டு மாவட்டம் தென்மேல்பக்கத்தில் உள்ள மருத்துவ கழிவுகள் எரியூட்டும் ஆலையில் தீயிட்டு அழிக்கப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் , போதைப் பொருட்கள் தொடர்பாக 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த மே மாதம் வரை 689 கைது செய்யப்பட்டுள்ளனர். 1,300 கிலோ கஞ்சாவின் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கக்கூடும். மேலும், கடந்த 5 மாதங்களில் போதைப் பொருட்களுக்கு பயன்படுத்திய 45 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கல்வி இடங்களில் போதைப் பொருள் சம்பவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். 489 பள்ளிக்கூடங்களில் இதுவரை 42,000 பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் 2,000 போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபடுவோரின் வங்கிக் கணக்கு முடக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு கூறினார்.