சென்னை: ஜூலை 11ந்தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என அகில இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை கோஷம் வலுவடைந்த நிலையில், நேற்று கூடிய அதிமுக பொதுக்குழுவிலும் எதிரொலித்தது. தொடர்ந்து, அதிமுக அவைத்தலை வராக தமிழ்மகன் உசேன் ஒருமானதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட இருந்த 23 தீர்மானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அடுத்த பொதுக்குழு ஜூலை 11ந்தேதி கூடி, ஒற்றை தலைமை குறித்து முடிவு செய்யும் என அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்தார். இதனால் கடுப்படை ஓபிஎஸ், மேடையில் இருந்து கீழே இறங்கினார். அப்போது, ஓபிஎஸ்-க்கு எதிரான கோஷங்களும் விண்ணை பிளந்த நிலையில், அவர்மீது தண்ணீர் பாட்டில்களும் வீசப்பட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், அவைத்தலைவர், ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறும் என அறிவித்ததற்கு எதிராக, அகில இந்திய தேர்தல் ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்துள்ளார். ஓபிஎஸ் சார்பில் அவரது வழக்குரைஞர்கள் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், அதில், ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. மேலும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இன்றி அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பொதுக்குழுக் கூட்டம் கட்சி விதிகளுக்கு புறம்பானது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.