தூத்துக்குடி: கடுமையான நெருக்கடியுல் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்கு, ஏற்கனவே தமிழகஅரசு உணவுப்பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், 2வது கட்டமாக, தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு அத்தியாவசியப் பொருட்கள் ஏற்றப்பட்ட சரக்கு கப்பலை அமைச்சர்கள் பெ.கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், அர.சக்கரபாணி, ஆகியோர் கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு அங்குள்ள மக்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தில் இருந்து ரூ.80 கோடி மதிப்பில் 40,000 டன் அரிசி, ரூ.28 கோடி மதிப்பிலான உயிர்காக்கும் மருந்து பொருட்கள் மற்றும் ரூ.15 கோடி மதிப்பிலான 500 டன் பால் பவுடர் ஆகிய அத்யாவசியப் பொருட்கள் தமிழகத்தில் இருந்து அனுப்பப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, ஏற்கனவே கடந்த மே மாதம் 18ந்தேதி தல் கட்டமாக ரூ.30 கோடி மதிப்பிலான 9,045 டன் அரிசி, ரூ.1.5 கோடி மதிப்பிலான 50 டன் ஆவின் பால் பவுடர், ரூ. 1.44 கோடி மதிப்பிலான 8 டன் அத்தியாவசிய மருந்து பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து, தற்போது 2-ம் கட்டமாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ‘விடிசி சன்’ என்ற சரக்கு கப்பலில் ரூ.48.30 கோடி மதிப்பிலான 14,712 டன் அரிசி, ரூ.7.50 கோடி மதிப்பிலான 250 டன் ஆவின் பால் பவுடர், ரூ.11.90 கோடி மதிப்பிலான 38 டன் உயிர்காக்கும் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் என மொத்தம் ரூ.67.70 கோடி மதிப்பிலான 15 ஆயிரம் டன் எடையுள்ள பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிகஅரசு தெரிவித்துள்ளது.