சென்னை: தலைவர்கள் வருகை தாமதமானதால் அதிமுக பொதுக்குழு தொடங்கும் நேரம் தாமதமாகி உள்ளது. தற்போதுதான் இபிஎஸ் வருகை தந்துள்ள நிலையில், இன்னும் சிறிது நேரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்களின் கோஷத்தால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் மண்படத்துக்கு வருகை தந்த ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்-ஐ அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் மலர் கொத்து கொடுத்து வரவேற்றார்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரம், ஸ்ரீ வாரு மண்டபத்தில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. முன்னதாக, பொதுக்குழுவில், பங்கேற்க வரும் இபிஎஸ் ஓபிஎஸ் வீட்டை கடந்து சென்றபோது ஓபிஎஸ்சின் ஆதரவாளர்கள் அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து இபிஎஸ் ஆதரவாளர்கள் ஓபிஎஸ்சுக்கு எதிராக கோஷங்களும் எழுப்பினர்.
இதற்கிடையில் சுமார் 10.30 மணி அளவில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்கள் புடைசூ பொதுக்குழுவுக்கு வருகை தந்தார். அதைத்தொடர்ந்து, 11.40 மணி அளவிலேயே இபிஎஸ் தனது ஆதரவாளர்கள் புடை சூழ வருகை தந்தார்.
இதற்கிடையில், ஓ. பன்னீர் செல்வம் வந்த பிரச்சார வாகனத்தை அரங்கில் உள்ளே நிறுத்த கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் வண்டியை தட்டி வெளியே கொண்டு போ என்று ஓட்டுநரை மிரட்டினார்கள். இதனையடுத்து ஓட்டுநர் பயந்து போய் வண்டியை பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வெளியே வண்டியை எடுத்து சென்றார்.
தொடர்ந்து பொதுக்குழு நடைபெற உள்ள மண்டபத்துக்குள் இபிஎஸ், ஓபிஎஸ் இரு தரப்பினரும் தங்களது தலைவர்களை வாழ்த்தி கோஷம் எழுப்பி வருகின்றனர். ஒற்றைத்தலைமை வேண்டும் என ஒரு சாரார் கோஷம் எழுப்பி வருகின்றனர். மற்றொரு சாரார் இரட்டைத்தலைமை வேண்டும் என கோஷம் எழுப்பி வருகின்றனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. பொதுக்குழு உறுப்பினர்கள் இரு பிரிவாக பிரிந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர், தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாமல் தலைவர்கள் வருகின்றனர்.
பொதுக்குழு உறுப்பினர்கள் அமைதி காக்குமாறு வைகைச்செல்வன் வலியுறுத்தி வருகிறார். ஆனால் அதை யாரும் கேட்பதாக இல்லை.
இதற்கிடையில், பொதுக்குழு உறுப்பினர்கள் நிறைவில் கையெழுத்திட வில்லை என புகார்கள் எழுந்தன. இதையடுத்து, கையெழுத்திட்ட பின்னரே பொதுக் குழு கூட்டத்தில் பங்கேற்போம் – பன்னீர்செல்வம் தரப்பு கூறினர். இதையடுத்து, அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றுள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தின் நிறைவில் கையெழுத்திட அறிவுறுத்தப்பட்ட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.