சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதாக ஓபிஎஸ் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்து உள்ளார். ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ள 23 தீர்மானங் களை மட்டும்தான் அனுமதிப்பேன், வேறு எதற்கும் அனுமதி தரமாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை தடை கோரியும், அதிமுக விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க ராம்குமார் ஆதித்தன், சுரேன், கேசி பழனிசாமி மனுவில் கோரிக்கை வைத்திருந்தனர். அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேல்முறையிடும் செய்திருந்தார். மனுவில், ஒவ்வொருவருக்கும் 5 ஆண்டுகள் பதவி காலம் இருக்கிறது. எவ்வித நிகழ்ச்சி நிரல் இல்லாமல் பொதுக்குழு கூடுவதாகவும், மேலும் எவ்வித காரணங்களும் கூறாமல் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதால் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இந்த நிலையில், வழக்கு இன்று மாலை விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து நாளை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி நாளை விரிவாக விசாரணை நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டது. இன்றைய விசாரணையின்போது, ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றுவது தொடர்பாக 23 வரைவு தீர்மானங்கள் தயாராகி உள்ளதாகவும், அது கட்சி தலைமையகத்தில் இருந்து மின்னஞ்சல் மூலம் பெற்றதாகவும், அவை நாளை நிறைவேற்றப்பட உள்ளதாகவும் கூறினார்.
மேலும், அதிமுக தீர்மான குழுவினரால் இயற்றப்பட்டுள்ள 23 தீர்மானங்களுக்கு தான் சம்மதம் தெரிவிப்பதாகவும் ஆனால் இவற்றைத் தாண்டி நாளைய கூட்டத்தின் போது வேறு எந்த நிகழ்ச்சி நிரலும் இடம்பெறக் கூடாது என்றும் கூறியதுடன், இவற்றைத் தாண்டி வேறு எதுவும் எனது அனுமதிக்கு வரவில்லை என்று கூறியுள்ளார்.
அத்துடன், நாளை எந்த புதிய நிகழ்ச்சி நிரலையும் அனுமதிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளதுடன், நாளை நிகழ்ச்சிகள் அனைத்தும், என் வழியாகத்தான் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், கட்சியின் சட்டதிட்டங்களுக்கும், அரசியல் சாசனத்துக்கும் எதிராக செயல்பட மாட்டேன் என்று இந்த நீதிமன்றத்திற்கு உறுதியளிக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.