சென்னை: சென்னையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தொற்று பரவல் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 12ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழ்நாட்டிலும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் புதிதாக 737 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில், அதிகபட்சமாக சென்னையில் 383 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், சென்னையின் பிரதான மார்க்கெட் பகுதியான கோயம்பேடு, மார்க்கெட்டில் உள்ள அனைத்து வியாபாரிகள், ஊழியர்கள், கூலித் தொழிலாளர்கள் என அனைவரும் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளதுடன், கொரோனா சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், மார்கெட் வளாகத்தில் முககவசம் அணிவது, கடை முன்பு சாணிடைசர் வைப்பது, சமூக இடைவெளி கடை பிடிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறை களை வியாபாரிகள் கடை பிடிக்க வேண்டும் என்று ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது. கடைகளில் தேவையற்ற கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும்படியும், விதிமுறைகளை மீறும் வியாபாரிகள், கடை ஊழியர்கள், கூலி தொழிலாளர்கள் மற்றும் மார்கெட்டுக்கு வரும் பொதுமக்களிடம் அபராதம் விதிக்கவும் அங்காடி நிர்வாக குழு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே கடந்த வாரம் முதல் மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் கடை நடத்தும் வியாபாரிகள், ஊழியர்கள், தொழிலாளர்கள், மார்கெட்டுக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 7நாட்களில் இதுவரை 1000 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 2 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களின் விபரங்களை சுகாதாரதுறையினர் சேகரித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து, மார்க்கெட்டில் பணியாற்றி வரும் தொழிலாளர்களின் பட்டியலும் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அங்காடி நிர்வாக குழு முதன்மை நிர்வாக அதிகாரி சாந்தி கூறும்போது, மார்க்கெட்டில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம் மூலம் 2-வது தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகளை ஏராளமான வியாபாரிகள் ஆர்வமுடன் செலுத்தி வருகின்றனர் மேலும் வியாபாரிகள், கடை ஊழியர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்து கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒத்துழைப்பு தராத, விதிமுறைகளை மீறும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.