இந்தியாவின் அடுத்த குடியரசு தலைவருக்கான வேட்பாளராக ஆளும் பாஜக சார்பாக நிறுத்தபட்டுள்ள திரௌபதி முர்மு, ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

மே 2015 முதல் ஜூலை 2021 வரை ஆறு ஆண்டுகள் ஜார்கண்ட் மாநில ஆளுநராக பதவிவகித்த திரௌபதி முர்மு ஆளுநர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின் தனது சொந்த ஊரான ரைரங்பூரில் வசித்து வருகிறார்.

1958 ம் ஆண்டு ஜூன் 20 ம் தேதி ஒடிசாவின் பழங்குடி இனத்தில் பிறந்த இவர் புவனேஷ்வரில் உள்ள ராமதேவி மகளிர் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றவர்.

படிப்பை முடித்து ரைரங்பூரில் உள்ள ஸ்ரீ அரவிந்தர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மைய்யத்தில் கௌரவ உதவி ஆசிரியராக பணி புரிந்த முர்மு பின்னர் பாசனத்துறையில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்தார்.

1997 ம் ஆண்டு அரசியலில் களமிறங்கிய முர்மு அந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ரைரங்பூரில் இருந்து மாவட்ட கவுன்சிலுக்கு கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார்.

2000 மற்றும் 2004 ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. சார்பில் ரைரங்பூர் சட்டமன்ற உறுப்பினராக இருமுறை தேர்வு செய்யப்பட்ட இவர், 2000 முதல் 2004 வரை பிஜு ஜனதா தளம் கட்சி தலைமையிலான நவீன் பட்நாயக் ஆட்சியில் அமைச்சராக பொறுப்பு வகித்தார்.

திரௌபதி முர்மு-வை தங்களது வேட்பாளராக பா.ஜ.க. தேர்ந்தேடுத்திருப்பதன் மூலம் குஜராத், மத்திய பிரதேஷ், சட்டிஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் இடையே காங்கிரஸ் கட்சிக்கு உள்ள ஆதரவை குலைக்க உதவும் என்று எண்ணியுள்ளதாகக் கூறப்படுகிறது.

குடியரசு தலைவர் வேட்பாளராக எதிர்க்கட்சிகள் சார்பில் யஸ்வந்த் சின்ஹா முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து ஜூலை 18 ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தலில் திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் இந்தியாவின் முதல் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண் குடியரசு தலைவர் என்ற பெருமையை பெறுவார்.