சென்னை: மழைக்காலங்களில் பேரிடரை எதிர்கொள்ள ஆயத்தப் பணிகள் செய்யப்பட்டுள்ளன. 24மணி நேர கட்டுப்பாட்டு அமையம் அமைக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெப்பசலனம் காரணமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரு நாட்களாக பெய்துவந்த கனமழை மற்றும் ஆந்திராவில் இருந்து வரும் கிருஷ்ணா நீர் காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழக்கும் ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி நிறைந்துள்ளது. 24அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது நீர் இருப்பு 23.48அடியாகவும், நீர்வரத்து 550 கனஅடி யாகவும் உள்ளது.
இதையடுத்து, முதற்கட்டமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 250 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் கரையோர பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அடையாறு ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகளுடன் ஆய்வுசெய்த அமைச்சர் சாத்தூர்ராமச்சந்திரன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மழைக்காலங்களில் பேரிடரை எதிர்கொள்ள ஆயத்தப் பணிகள் செய்யப்பட்டுள்ளன என்றவர், சென்னையில் மழை, வெள்ளம் குறித்த புகார்களை தெரிவிக்க மாவட்ட மையங்களை ஒருங்கிணைக்க அவசர கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
24மணி நேரமும் செயல்படும் வகையில் கூடுதல் அலுவலர்களுடன் மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது என்று கூறியவர், பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க இலவச தொலைபேசி எண்கள்: 1070, 1077, சென்னை மாநகராட்சி 1913, 9445869848 எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்றார்.
மேலும், பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழைநீரை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் அகற்றின என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.