சென்னை: தமிழகத்தில் 3 மாதங்களுக்கு பிறகு கொரோனாவால் நேற்று இளம்பெண் ஒருவர் மரணத்தை எய்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 18வயதான அந்த இளம்பெண் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் குறைந்துவந்த கொரோனா பாதிப்பு மீண்டும் சற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, பொதுஇடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என தமிழகஅரசு வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட தகவலின்போடு, தற்போது 119 பேர் கொரோனா தொற்றுக்கு மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், கடந்த 3 மாதமாக தமிழ்நாட்டில் எந்தவொரு கொரோனா உயிரிழப்பும் இல்லாத நிலையில், நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் எந்தவித நோயும் இல்லாத நிலையில், கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளார். அப்பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று திடீரென உயிரிழந்துள்ளார். இது மருத்துவ அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உயிரிழந்த 18வயது பெண் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 7.15 மணிக்கு கடும் இருமல் மற்றும் காய்ச்சலால் தஞ்சாவூர் அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று மதியம் 2.30 மணிக்கு உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த இளம்பெண் 2 டோஸ்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ள நிலையில், அவரது மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதைத்தொடர்ந்து அவரது மரணத்துக்கு காரணம் என்ன என்பது குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. கொரோனாவால் உயிரிழந்த இளம்பெண் எந்த வகையான வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார் என்பதை கண்டறிய அவரிடம் இருந்து பெறப்பட்ட மாதிரி சென்னை ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது.
தற்போது நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க பிஏ4, பிஏ5 வகை வேரியண்ட்தான் வைரஸ்தான் காரணம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த தொற்றில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள, முகக் கவசம் அணிவதும் , சமூக இடைவேளையை கடைபிடிப்பதும்தான் தீர்வு என்று மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர். மேலும் துணை நோய் உள்ளவர்கள் மற்றும் முதியவர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.