டெல்லி: இந்தியாவின் 16வது குடியரசு தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கி உள்ளது. வேட்பாளர்களை தேர்வு செய்வதில், ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சிகளும் தீவிரமாக செயலாற்றி வருகின்றன.

இந்தியாவின் 15 வது குடியரசு தலைவராக  தற்போது இருந்து வரும் ராம்நாத் கோவிந்த்  பதவி காலம் ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இவர் கடந்த கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்ற நிலையில், அவரின் பதவிக்காலம் முடிவடைவதால், புதிய குடியரசு தலைவருக்கான தேர்தல் தேதியை கடந்த வாரம் அகில இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி,  குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதையொட்டி, இன்று (ஜூன் 15ந்தேதி) வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது.  வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூன் 29ந்தேதி ஆகும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற ஜூலை 2 ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறும். அதன்பின்னர், ஜூலை 21 ஆம் தேதிக்குள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதற்கிடையில்,குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒருமித்த முடிவுடன் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக ஆளும் பாஜக திட்டமிட்டு வருகிறது. அதுபோல எதிர்க்கட்சி சார்பிலும் பொதுவேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், எதிர்க்கட்சி யினரிடையே ஒற்றுமை இல்லாத சூழல் நிலவி வருகிறது. காங்கிரஸ் தலைமை ஒரு நிலையிலும், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றொரு நிலையிலும் எதிரும்புதிருமாக செயல்பட்டு வருகின்றனர்.  இதற்கிடையில், இன்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் தலைமையில், எதிர்க்கட்சியினர் டெல்லியில் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகின்றனர்.