திருநீர்மலை ஸ்ரீ நீர்வண்ணப் பெருமாள் கோவில், காஞ்சிபுரம் மாவட்டம் திருநீர்மலையில் அமைந்துள்ளது.

ஸ்ரீரங்கத்தில் மகாவிஷ்ணுவை சயனக்கோலத்தில் தரிசித்த பிருகு முனிவர், மார்க்கண்டேய மகரிஷி இருவரும் தங்கள் இருப்பிடம் நோக்கி இவ்வழியே சென்றனர். அவர்களுக்கு பெருமாளின் சயனக்கோலம் கண்களை விட்டு அகலவே இல்லை. மீண்டும் ஒருமுறை அந்த தரிசனம் கிடைக்க வேண்டுமென விரும்பினர். எனவே, இத்தலத்தில் தங்களுக்கு அந்த திருக்கோலத்தைக் காட்ட வேண்டும் என உருக்கமாக பெருமாளை வேண்டினர். அப்போது சுவாமி “போக சயனத்தில்” அரங்கநாதராக இங்குள்ள மலையில் காட்சி கொடுத்தார். இவரே இங்கு மலைக்கோவில் மூர்த்தியாக அருளுகிறார். அருகில் பிருகு, மார்க்கண்டேயர் இருவரும் இருக்கின்றனர்.

இத்தலத்துள்ள பெருமாளைத் தரிசிக்க திருமங்கையாழ்வார் வந்தபோது, மலையைச் சுற்றிலும் நீர் நிறைந்திருந்தது. அவரால் நீரைக் கடந்து சென்று சுவாமியை தரிசிக்க முடியவில்லை. ஆனாலும், அவர் காத்திருந்து சுவாமியை தரிசித்துவிட்டுச் செல்வதென முடிவெடுத்தார். கோவில் எதிரேயுள்ள மற்றொரு மலையில் தங்கினார். நாட்கள் நகர்ந்ததே தவிர, தண்ணீர் குறைந்தபாடில்லை. ஆனாலும் பெருமாளை தரிசிக்க வேண்டுமென்பதில் தீர்க்கமாக இருந்த திருமங்கையாழ்வார், தண்ணீர் வடியும் வரை காத்திருந்து, சுவாமியை தரிசிக்கச் சென்றார். தன் மீது பாசம் கொண்ட பக்தனுக்காக பெருமாள் நின்ற கோலத்தில் நீர்வண்ணப்பெருமாள், இருந்த கோலத்தில் நரசிம்மர், சயன கோலத்தில் அரங்கநாதர், நடந்த கோலத்தில் உலகளந்த பெருமாள் என நான்கு கோலங்களையும் காட்டியருளினார். இந்த நால்வரையும் இத்தலத்தில் தரிசிக்கலாம். நீர்வண்ணப்பெருமாள் மலையடிவாரத்திலுள்ள கோவிலிலும், அரங்கநாதர், நரசிம்மர், உலகளந்த பெருமாள் ஆகியோர் மலைக்கோவிலிலும் அருள்கின்றனர்.

காண்டவ வனத்தில் தோயாத்ரி மலைவாசல்னு அலங்கார நுழைவு வாசல் உள்ளது. நல்ல அகலமான படிக்கட்டுகள், ஒரே சீரான உயரமுடைய 200 படிகள் உள்ளன. பாதி தூரத்தில் வலப்பக்கம் பிரியும் இடத்தில் நான்கு படி இறங்கி எட்டிப்பார்த்தால் சிறியதாக ஆஞ்சநேயர் சந்நிதி ஒன்று உள்ளது.

கோவில் முகப்பில் மூன்று நிலைக் கோபுரத்தின் முன் நான்கு தூண் கொண்ட மண்டபம் உள்ளது. இந்த மண்டபம் எம்.எஸ்.சுப்புலக்‌ஷ்மி மற்றும் ‘கல்கி’ சதாசிவம் தம்பதியர் கட்டிய மண்டபம். அவர்களின் திருமணம் இந்தக் கோவிலில் தான் நடந்தது.

உள்ளே நுழைந்தால் வெளிப்பிரகாரத்தில் இடதுபக்கம் ஆதிசேஷனுக்குத் தனிச்சந்நிதி உள்ளது. வலதுபக்கம் கொடிமரம் கடந்து ஒரு பத்துப் படிக்கட்டுகள் ஏறிப்போனால் படியின் முடிவில் பெரியதிருவடி சிறியதாக நிற்கும் சந்நிதி உள்ளது. அவருக்கு நேர் எதிரே கருவறையில் ரங்கநாதர் தெற்கு நோக்கி பள்ளிகொண்டுள்ளார். கருவறைப் படிக்கட்டின் இரண்டு பக்கமும் பாவை விளக்கேந்தும் பழங்காலப் பெண்டிர் சிலைகள் உள்ளன.


பெருமாள் இங்கே சுயம்புவாக தோன்றியார். இது எட்டு சுயம்பு க்ஷேத்ரங்களில் ஒன்றாகும். மற்ற ஏழு சுயம்பு க்ஷேத்ரங்கள் ஸ்ரீரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருப்பதி, ஸாளக்ராமம், நைமிசாரண்யம், புஷ்கரம், பத்ரி. சுயம்பு மூர்த்தி என்பதால் இங்கே மூலவருக்கு அபிஷேகம் இல்லை. கார்த்திகை மாதம் பௌர்ணமி தினத்தில் மட்டும் தைலக்காப்பு உண்டு. சாம்பிராணித் தைலம் மட்டும் பூசப்படுகிறது.

சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து, வஸ்திரம் அணிவித்து விசேஷ பூஜை செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இங்கே ஒவ்வொரு பௌர்ணமிக்கும் கிரிவலம் நடைபெறுகிறது.