சென்னை: தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கோராவிட்டால், அவர்மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தினார். அதில்,  கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து தொகுப்பில் முறைகேடு நடந்துள்ளதாக தெரிவித்திருந்தார். கர்ப்பிணிகளுக்கான தாய் – சேய் நல பெட்டகத்தில் வழங்கப்படும் ஊட்டச்சத்து பவுடர், இரும்புச் சத்து டானிக்கை ஆவினை நிராகரித்து தனியார் நிறுவனத்திடம் கொள்முதல் செய்வதால் அரசுக்கு ரூ.77 கோடி இழப்பு ஏற்படுகிறது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு தமிழகஅரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், தமிழகஅரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அடிப்படை ஆதாரமற்ற மற்றும் உண்மைக்கு புறம்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் ஒப்பந்தத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, காழ்ப்புணர்ச்சியுடன் அரசின் மீது குற்றம் சாட்டி யுள்ளார்.  தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ஆதாரம் இருந்திருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுத்திருக்கப்படும். குறைகள் இருந்தால் களையப்படும்.  அதைவிடுத்து ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்து அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் யாரும் ஈடுபட வேண்டாம்.

தற்போது கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் ஒப்பந்தம், அண்ணாமலை கூறியதுபோல, அனிதா டெக்ஸ்கார்ட் நிறுவனத்துக்கு வழங்கப்படவில்லை. பாலாஜி சர்ஜிக்கல் என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன் வைத்ததற்கு அண்ணாமலை நாகரிகமான முறையில் வருத்தமாவது தெரிவிக்க வேண்டும் அல்லது துறையின் அடிப்படையில் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.