போபால்: ஆம்புலன்ஸ் கொடுக்காததால், மகளின் உடலை தந்தை தோளில் சுமந்து சென்ற அவலம் பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தில் அரங்கேறி உள்ளது. இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியபிரதேச மாநிலம், சத்தார்பூர்மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரின் 4வயது மகள் உடல்நலப் பாதிப்பு காரணமாக, அருகில் உள்ள பக்ஸ்வாகா சுகாதார மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிறுமியின் உடல்நிலை மோசம் அடைந்தது. இதையடுத்து அவரை அருகில் உள்ள தாமோஹ் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் அவரை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து சிறுமியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுசெல்ல அவரது தாத்தா மன்சுக் அகிர்வார், மருத்துவமனை ஊழியர்களிடம் அமரர் ஊர்தி கேட்டார். ஆனால், மருத்துவமனை நிர்வாகம், அமரர் ஊர்தி, ஆம்புலன்ஸ் ஏதும் கிடையாது என மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் தனியார் வாகனம்மூலம் சிறுமியின் உடலை எடுத்துவர முடியாத நிலையில், இறந்த சிறுமியின் உடலை போர்வையில் சுற்றி பேருந்து மூலம் பக்ஸ்வாகா எடுத்துவந்தனர். பிறகு அங்கிருந்து கிராமத்துக்கு சிறுமியின் தந்தை லக்ஷ்மன் வேறு வழியின்றி தனது மகளின் உடலை தானே தனது தோளில் சுமந்து சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில், இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்தள்ள தாமோஹ் மாவட்ட மருத்துவமனை அதிகாரி மம்தா திமோரி மறுத்துள்ளார். ‘எங்களிடம் அமரர் ஊர்தி உள்ளது. ஆனால் அமரர் ஊர்தி கேட்டு என்னை யாரும் அணுகவில்லை’ என்று மறுப்பு தெரிவித்து உள்ளார்.