சென்னை: கோடை விடுமுறைக்கு பிறக வரும் 13ந்தேதி பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், அனைத்து அரசு பள்ளிகளும் சுத்தப்படுத்தப்பட்டு, மாணவர்கள் சேர்க்கை விறுவிறுவென நடைபெற்று வருகின்றன. மாணவர்களுக்கு தேவையான புத்தகங்களும், பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகள் என மொத்தம் 32 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதுதவிர, தனியார் சுயநிதிப் பள்ளிகள் சுமார் 12 ஆயிரம் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 1 கோடியே 20 லட்சம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் 13ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன.
இதையடுத்து, பள்ளிகள் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், பள்ளித்தலைமை ஆசிரியர்கள் செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, நேற்று முதல் மாணவர்களை சேர்க்கும் பணியும் தொடங்கியது. இடையில் எல்கேஜி, யுகேஜி விஷயத்தில் திமுக அரசு குழப்பத்தை ஏற்படுத்தியதால், மாணவர்கள் சேர்க்கை தொய்வு அடைந்தது. தற்போது மீண்டும் எல்கேஜி, யுகேஜி தொடரும் என அரசு அறிவித்துள்ள நிலையில், மாணவர்கள் சேர்க்கைக்காக பெற்றோர்கள் அரசு பள்ளிகளை நாடி வருகின்றனர்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகள் முறையான கல்வி போதிக்கப்படாததால், மாணாக்கர்கள் கல்வி நிலைமை குறைந்த நிலையில், நடப்பாண்டு முழுமையாக பள்ளிகளை நடத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு தகுந்தார்போல பள்ளிப்பாடப் புத்தகம் ஏற்கனவே அச்சிடப்பட்டு, அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மேலும், அனைத்து மாவட்டங்களிலும், மாணவர்களை சேர்ப்பதற்கான விழிப்புணர்வு பிரசாரங்களை ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். பேரணி நடத்துவது, துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.