மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. அதே வேளையில் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால், ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
மேட்டூர் அணைக்கு நடப்பாண்டு நீர்வரத்து அதிகம் காரணமாக, முன்கூட்டியே சாகுபடிக்காக அணை திறக்கப்பட்டுள்ளது. இதனால், காவிரியின் கிளை ஆறுகளிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த நிலையில், சென்னையில் குடும்பத்துடன் வசித்து மேட்டூர் அடுத்த சேத்துக்கு ளியை சேர்ந்த சகோதரர்களான முருகேஷ் மற்றும் அவரது தம்பி தமிழ்செல்வன் ஆகியோர் விடுமுறைக்காக தங்களது குழந்தைகளை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்திருந்தனர். அவர்களது சித்ரா என்ற மகளும், காமாட்சி என்ற மகளும் தனது சொந்த ஊரில் உள்ள பெற்றோர் இல்லத்தில் கடந்த 10 நாட்களாக தாத்தா பாட்டி வீட்டில் மகிழ்ச்சியுடன் வசித்து வந்தனர். இவர்கள் வரும் 13ந்தேதி பள்ளிகள் திறக்க இருப்பதால், நாளை சென்னை செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், இன்று இறு சிறுமிகளையும், அவர்களது பாட்டி காவிரி ஆற்றிற்கு சென்றுள்ளார். பாட்டி கரையில் துணி துவைத்துக் கொண்டிருந்த நிலையில், சிறுமிகள் இருவரும் காவிரியில் இறங்கி மகிழ்ச்சியுடன் துள்ளிக்குதித்து குளித்து மகிழ்ந்தனர்.
இந்த நிலையில், சிறிது நேரத்தில் சிறுமிகள் இருவரையும் காணாததால் பாட்டி கூச்சலிட்டுள்ளார். இதனையடுத்து அங்கு வந்த அப்பகுதி மக்கள் ஆற்றில் இறங்கி தேடிய போது அங்கு தோண்டப்பட்டிருந்த குழியில் இரண்டு சிறுமிகளும் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. குழியில் ஏற்பட்டிருந்த சுழலில்சிக்கி இரு சிறுமிகளும் உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை எற்படுத்தி உள்ளது.
இதற்கிடையில் கர்நாடகாவில் இருந்து காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீர் அளவு குறைந்துள்ளதால், ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க, பரிசல் இயக்க மீண்டும் அனுமதி அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.