அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் உள்ள சுமார் 7800 இன்ஜினியரிங் சீட்டுகள் இந்த ஆண்டு முதல் மூடப்படுகிறது.

மெக்கானிகல், சிவில், ஆர்கிடெக்ட் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருவதால் தமிழகத்தில் உள்ள 234 கல்லூரிகளில் மொத்தம் 7792 இடங்களுக்கான சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளது.

37 கல்லூரிகளில் பி.இ., பி. டெக்., பி. ஆர்க்., எம்.இ., ஆகிய பட்டபடிப்புகளின் கீழ் 1034 இடங்கள் கொண்ட 10 பாடப்பிரிவுகளில் நிரந்தரமாக மூடப்படுகிறது.

இதில் சிவில் இன்ஜினியரிங் மற்றும் ஆர்கிடெக்ட் ஆகிய பாடப்பிரிவுகள் முதல் இரண்டு இடத்தில் உள்ளது.

நிரந்தரமாக மூடப்படும் பாடப்பிரிவுகள்

பட்டம்  பாடப்பிரிவு  பாடப்பிரிவை மூடும் கல்லூரிகளின் எண்ணிக்கை  இழந்த மொத்த இடங்கள் 
பி.இ. சிவில் இன்ஜினியரிங் 13 480
பி.ஆர்க். ஆர்கிடெக் 2 80
எம்.இ. பவர் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டிரைவ் 5 72
எம்.இ. அப்ளைட் எலக்ட்ரானிக்ஸ் 4 63
எம்.இ. கம்ப்யுட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங் 5 63
பி.இ. ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் 2 60
பி.டெக் கெமிக்கல் இன்ஜினியரிங் 1 60
பி.இ. கம்ப்யூட்டர் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் 1 60
பி.இ. கம்பியூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங் 2 60
எம்.இ. பவர் சிஸ்டம்ஸ் இன்ஜினியரிங் 2 36

தமிழகம் முழுவதும் மாணவர் சேர்க்கை நிறுத்திவைக்கப்பட்டுள்ள மொத்தம் 7792 இடங்களில் மெக்கானிகல் பாடப்பிரிவில் மட்டும் 89 கல்லூரிகளில் உள்ள 3282 இடங்கள் முடக்கப்பட்டுள்ளது.

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அடிப்படையில் கல்லூரி நிர்வாகம் விரும்பும் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கையை குறைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளன.

மாணவர் சேர்க்கை குறைக்கப்பட்டுள்ள பாடப்பிரிவுகள்

பட்டம்  பாடப்பிரிவு  பாடப்பிரிவை மூடும் கல்லூரிகளின் எண்ணிக்கை  இழந்த மொத்த இடங்கள் 
பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 89 3282
பி.இ. சிவில் இன்ஜினியரிங் 52 1560
பி.இ. எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் 32 874
பி.இ. எலக்ட்ரிக்கல்ஸ் அண்ட் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் 28 756
பி.டெக் கெமிக்கல் இன்ஜினியரிங் 10 360
பி.இ. ரோபோடிக்ஸ் அண்ட் ஆட்டோமேஷன் 3 240
பி.டெக் அக்ரிகல்ச்சுரல் இன்ஜினியரிங் 7 240
பி.இ. ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் 4 180
பி.இ. ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் 4 150
பி.இ. மெகாட்ரோனிக்ஸ் இன்ஜினியரிங் 6 150

கம்ப்யூட்டர் மற்றும் ஐ.டி. பாடப்பிரிவுகளில் சேரவே அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் விரும்புவதால் சிவில், மெக்கானிகல், ஆட்டோமொபைல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளை மூட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஐ.டி. துறையுடன் ஒப்பிடுகையில் மற்ற பாடப்பிரிவு மாணவர்களுக்கு குறைவான ஊதியமே கிடைப்பதாலும், வேலைக்கு சேர்ந்து ஒரு சில ஆண்டுகளிலேயே அவர்களும் ஐ.டி. துறையில் வேலைக்கு சேர்ந்து விடுவதாலும் மாணவர்களிடையே சில பாடப்பிரிவுகளில் சேர ஆர்வம் குறைந்துள்ளது.

மெக்கானிகல் பாடப்பிரிவை அடுத்து 52 கல்லூரிகளில் சிவில் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் உள்ள 1560 இடங்கள் குறைக்கப்பட்டுள்ளது.

ஜூன் 20 ம் தேதி தொடங்க இருக்கும் 2022 – 23 ம் கல்வி ஆண்டுக்கான சேர்க்கையில் இந்த இடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.