டெல்லி: ஹவாலா பணப் பரிவா்த்தனையில் சிக்கி கைது செய்யப்பட்டு, போலீஸ் காவலுக்கு சென்ற  டெல்லி ஆம்ஆத்மி  அமைச்சர் சத்யேந்தர் ஜெயினினுக்கு  திடீர் வயிற்றுவலி ஏற்பட்டதாகவும், அதனால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2015-16 ஆண்டுகளில் தலைநகர் டெல்லியில் ஆம்ஆத்மி அரசின் சுகாதாரத்துறை அமைச்சராக  இருந்தவர் சத்யேந்தா் ஜெயின். இவரது பதவி காலத்தின்போது,  அவா் மற்றும் அவரது குடும்ப உறுப்பினா்களின் பெயா்களில் பதியப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு பெயரளவில் செயல்படும் போலி நிறுவனங்கள் (ஷெல்) மூலம் ரூ.4.81 கோடி பணப் பரிமாற்றம் நடைபெற்றது. அந்தப் பணம் கொல்கத்தாவில் உள்ள ஹவாலா பண முகா்வா்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு, டெல்லிக்கு அருகே விவசாய நிலங்கள் வாங்கப்பட்டும், வங்கிகளில் பெறப்பட்ட கடன்கள் அடைக்கப்பட்டும் உள்ளன என்று குற்றம்சாட்டி சிபிஐ ஆகஸ்ட் 25, 2017-இல் வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரிக்க சிபிஐக்கு மத்திய உள்துறை அமைச்சகம்,  நவம்பர் 2019 இல், சத்யேந்திர ஜெயின் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் மற்றும் பணமோசடி தொடர்பான வழக்குகளில் விசாரணை நடத்த உஒப்புதல் அளித்தது. இதையடுத்து, சத்யேந்தா் ஜெயின், அவரது மனைவி பூனம் ஜெயின் மற்றும் குடும்பத்தினர் மீது, வருமானத்திற்கு அதிகமான  சொத்து மற்றும் பணமோசடி பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 இன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி,  சத்யேந்தா் ஜெயினின் பினாமி சொத்துகளை முடக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சத்யேந்திர ஜெயினின்,  அகின்சான் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.4.81 கோடி மதிப்பி லான அசையா சொத்துகளை அமலாக்கத் துறை அதிகாரிகள் ஏப்ரல் மாதம் பறிமுதல் செய்த பின்னர் ஜெயின் கைது செய்யப்பட்டார். ஜெயின் ஜூன் 9 வரை அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

இந்த நிலையில், சத்யேந்தர் ஜெயினிடம் மேலும் தகவல்களைப் பெற அமலாக்கத்துறை காவலை நீட்டிப்பு செய்ய சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்தது. தற்போது, ஜுன் 13 வரை அவரைக் காவலில் வைக்க நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு  அமலாக்கத்துறையினர் அவரை  தலைமையகத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அவர் அசௌகரியமாக உணர்ந்தார். இதையடுத்து, அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சத்யேந்திர ஜெயின் வயிற்று வலி உள்ளிட்ட உபாதைகளுக்கு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டால், அவர்களுக்கு நெஞ்சுவலி, வயிற்று வலி போன்ற நோய்கள் திடீரென தோன்றிவிடும் அதிசயம் இந்தியாவில்தான் அரங்கேறுகின்றன.