சென்னை: மறைந்த தி.மு.க தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி சிலையை துணைகுடியரசு தலைவர் வெங்கையா நாயுடு இன்று மாலை திறந்து வைத்தார்.
சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில், தமிழக அரசு சார்பில், ரூ. 1.70 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 16 உயர சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், துணைஜனாதிபதி வெங்கைநாயுடு திறந்து வைத்தார்.
சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் தமிழகஅரசு சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை வைக்கப்பட்டுஉள்ளது. 12 அடி பீடத்தில் 16அடி உயர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலையை சுற்றி மெழுகுப்பூச்சுடன் கூடிய கருங்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இன்று மாலை நடைபெற்ற விழாவில், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, கருணாநிதியின் சிலையைத் திறந்து வைத்தார். சிலையின் கீழ் அமைந்துள்ள 12 அடி உயர பீடத்தில், கலைஞரின் 5 கட்டளைகள் பொறிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் முழு உருவச்சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து பங்கேற்றனர். கே.எஸ்.அழகிரி, வைகோ, திருமாவளவன், சத்யராஜ், நாசர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இந்த சிலையானது திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் புதுப்பேடு பகுதியில் தத்ரூபமாக தயாரிக்கப்பட்டது ஆகும். இந்த சிலை அண்ணாசாலை வழியாக செல்வோரை கவர்ந்து இழுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கலைஞர் முதல்வராக இருந்தபோதுதான், ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டது. கலைஞர் தினசரி சென்று பார்த்து பார்த்து கட்டிய அழகான கட்டிடத்தை, அதிமுக ஆட்சியில் மருத்துவமனையாக ஜெயலலிதா மாற்றினார். மேலும், அந்த வளாகமும் பராமரிப்பு இல்லாமல் காட்சி அளித்தது.
தற்போது, முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும், கலைஞரின் சிலையை அந்த வளாகத்தில் வைக்க ஏற்பாடு செய்துள்ளதுடன், அந்த வளாகத்தை சுற்றியுள்ள பூங்காக்களும் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.