சென்னை: பணி ஓய்வூதியம் தொடர்பாக நிதித்துறை செயலாளர் முருகானந்தம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அதன்படி, குடும்ப ஓய்வூதியம் கோரும் நேர்வுகளில் கணவன் மற்றும் மனைவி இறப்பு சான்றிதழ் மட்டுமே சமர்ப்பித்தால் போதும் என தெரிவித்து உள்ளார்.
இந்தியாவில் குடும்ப ஓய்வூதியம் (Family Pension) என்பது பணிக்காலத்தில் இறந்த அரசு ஊழியர் அல்லது ஆசிரியர் அல்லது இறந்த ஓய்வூதியரின், குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு, பொருளாதார நலன் கருதி அரசால் மாதாமாதம் வழங்கப்படும் ஒரு ஈட்டுத் தொகையாகும்.
தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள பணி ஓய்வூதியத்தை (Service Pension) குடும்ப ஓய்வூதியமாக (Family Pension) மாற்றம் செய்வதில் அதிக காலதாமதமும் நடைமுறை சிக்கல்கள் அதிகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், குடும்ப ஓய்வூதியம் கோரும் நேர்வுகளில் கணவன் மற்றும் மனைவி இறப்பு சான்றிதழ் மட்டுமே சமர்ப்பித்தால் போதும் என்று தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் முருகானந்தம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக,அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”இனிவரும் காலங்களில் புதிய ஓய்வூதியதாரர்களுக்கு, ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை தளத்தில் (IFHRMS) கணவன் அல்லது மனைவியின் அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படும். எனவே,குடும்ப ஓய்வூதியம் கோரும் நேர்வுகளில் அவர்கள் கணவன் அல்லது மனைவியின் இறப்புச் சான்றிதழ் மட்டும் சமர்ப்பித்தால் போதுமானதாகும்”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சட்டசபையில் நிதித்துறை மானியக்கோரிக்கை விவாதத்தின்போது பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தற்போது நடைமுறையில் உள்ள பணி ஓய்வூதியத்தை, குடும்ப ஓய்வூதியமாக மாற்றம் செய்வதில் அதிக கால தாமதமும், நடைமுறைச் சிக்கல்கள் அதிகமாக உள்ளதாகவும் அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. தற்போது நடைமுறையில் உள்ள செயல்பாடுகளை எளிமைப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இனி வரும் காலங்களில் புதிய ஓய்வூதியதாரர்களுக்கு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை தளத்தில் கணவன்/மனைவியின் அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படும். எனவே, குடும்ப ஓய்வூதியம் கோரும் நேர்வுகளில் அவர்கள் கணவன்/மனைவியின் இறப்பு சான்றிதழ் மட்டும் சமர்ப்பித்தால் போதும். நடப்பு ஓய்வூதியதாரர்களுக்கு தற்போது பயன்பாட்டில் உள்ள கூடுதலான விவரங்களை கோரும் படிவம் 14க்கு பதிலாக குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கு எளிதான படிவம் மாற்றி அமைக்கப்படும் என கூறியிருந்த நிலையில், தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
ஏற்கனவே, மத்திய அரசு ஊழியர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் தொடர்பான புதிய விதியை மத்திய அரசு பிப்ரவரி மாதம் வெளியிட்டது. அதன்படி, இறந்த அரசு ஊழியர்களின் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கும் இனி குடும்ப ஓய்வூதிய பலன் கிடைக்கும். அதன்படி மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் குடும்ப ஓய்வூதியம் நிச்சயம் உண்டு. மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள், குடும்ப ஓய்வூதியம் கிடைக்காததால், தங்களைத் தாங்களே பராமரிக்க முடியாமல், வளர்ப்பதிலும், வாழ்வதிலும் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். . இந்தக் குழந்தைகள் மற்றவர்களைச் சார்ந்தே இருக்க வேண்டும். அதுபோன்ற சங்கடங்களை தவிர்க்கவே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியிருந்தார்.