சென்னை: இந்தியாவிலேயே அதிக நன்கொடை பெற்ற தேசிய கட்சிகளில் பாஜக தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் நிலையில், மாநில கட்சிகளில் தமிழ்நாட்டை சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) முதலிடத்தில் உள்ளது.

கடந்த 2020-2021 ஆம் ஆண்டில்  அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. அதேபோல்  கிடைத்த வருவாயில் 50%க்கும் மேல் செலவழித்து அதிலும் திமுகவே  முதலிடத்தில் உள்ளது.

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு (Association for Democratic Reforms-ADR) நாடு முழுவதும் உள்ள 31 மாநிலக் கட்சிகளின் வருவாய் மற்றும் செலவீனங்கள் பற்றிய அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில், ஒவ்வொரு கட்சிகளுக்கும் ஆண்டுதோறும் கிடைத்துள்ள வருவாய் மற்றும் செலவினங்கள் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநிலகட்சிகள் தாக்கல் செய்த அறிக்கையை சுட்டிக்காட்டி தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 54மாநிலக் கட்சிகள்  உள்ளன. இதில், 31 கட்சிகளின் தரவுகளின் அடிப்படையில், அந்தந்தக் கட்சிகளின்  விவரங்கள் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்  இடம்பெற்றுள்ளன. அதன்படி 31 மாநிலக் கட்சிகளின் மொத்த வருவாய் ரூ.529.41 கோடியாக உள்ளது. 31 கட்சிகளின் மொத்த செலவு  ரூ. 414.02 கோடியாகும்.

இதில், திமுக ரூ.149.95 கோடி வருவாய் ஈட்டி முதலிடத்தில் உள்ளது. அதேபோல் பெறப்பட்ட வருவாயில் இருந்து அதிக செலவு செய்த கட்சிகளிலும் திமுகவே முதலிடத்தில் இருக்கிறது.  திமுகவின் செலவு மட்டும் ரூ. 218.49 கோடி ஆக உள்ளது. அதாவது வருவாயில் இருந்து 52.77% செலவழிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது இடத்தில், ஒய்.எஸ்.ஆர்  காங்கிரஸ் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.  அக்கட்சியின் வருவாய்  ரூ.107.99 கோடி என்கிற அளவில் உள்ளது. அதுபோல ரூ. 54. 76 கோடியை  ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் செலவு செய்துள்ளது.

3வது இடத்தில், ரூ.73.34 கோடி வருவாயுடன் ஒடிசாவின் பிஜு ஜனதா தள கட்சி உள்ளது.

 அதிமுகவின் மொத்த செலவுக் கணக்கு ரூ. 42.36 கோடி.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.