சென்னை:
குரங்கு அம்மை பரவல் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாநகராட்சி ஆணையர்களுக்கும் தமிழக மருத்துவத்துறை செயலர் எழுதியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் உலக நாடுகளை ஸ்தம்பிக்க வைத்த நிலையில் குரங்கு அம்மை நோய் பரவல் உலக நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் குரங்கு அம்மை பாதிப்புள்ள நாடுகளுக்கு கடந்த 21 நாட்களில் சென்று வந்தவர்கள் தகவல் தர வேண்டும் என பொதுசுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாநகராட்சி ஆணையர்களுக்கும் மருத்துவத்துறை செயலாளர் இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில், வெளிநாட்டில் குரங்கு அம்மை அறிகுறிகள் இருந்தவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் உடனே தகவல் தரவேண்டும். குரங்கு அம்மை பாதிப்பு என சந்தேகத்திற்கிடமான அனைத்து நோயாளிகளும் தனிமைப் படுத்தப்பட வேண்டும். குரங்கு அம்மைக்கான அறிகுறி என சந்தேகம் இருந்தால் அவர்களின் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் புனேவுக்கு ஆய்வுக்காக அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.