சென்னை: மத்தியஅரசுக்கு எதிராக மே 25ந்தேதி முதல் ஒரு வாரம் போராட்டம் நடத்தப்படும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்டு கட்சிகள் கூட்டாக அறிவித்து உள்ளது. அதன்படி மே 25ந்தேதி முதல் 31ந்தேதி வரை தொடர் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, மத்தியஅரசின் அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்து நாளை மறுநாள் (மே 25ந்தேதி) முதல் 31ம் தேதி வரை ஒரு வாரம் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றும், மத்திய அரசு கொடுக்க வேண்டிய ரூ.28,000 கோடியை அண்ணாமலை பெற்றுத்தர வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன், மே 25ல் இருந்து 31 வரை நாடு தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானித்துள்ளோம். இடதுசாரி கட்சிகளுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளது. மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம், மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
மத்தியஅரசு அறிவித்த உள்ளது பெட்ரோல், டீசல் வரி குறைப்பு போதாது. பெட்ரோல், டீசல் விலையில் 200 சதவீத அளவுக்கு விலையை உயர்த்திவிட்டு வெறும் 7 சதவீதத்தை மட்டுமே குறைந்திருப்பது என்பது போதாது. பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரி உள்ளிட்ட வரிகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் பருத்தி விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. ஒன்றிய பாஜக அரசின் நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடி அரசு கடைபிடிக்கும் இந்த தவறான பொருளாதார கொள்கை மோசமான விளைவுகளை உண்டாக்கி வருகிறது. இதனால் நாடு தழுவிய அளவில் ஒரு கொந்தளிப்பு ஏற்படும் என்ற காரணத்தால், அண்மையில் பெட்ரோல்,டீசலுக்கான விலையை ஒரு சிறு அளவுக்கான வரியை குறைப்பது என்று மத்திய அரசு முடிவெடுத்துள்ளது அண்டை நாடான இலங்கையில் ஒரு கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டிருப்பது, மத்திய ஆட்சியாளர்களுக்கு ஒரு அச்சத்தைக் கொடுத்திருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
அதனால், மே 26, 27ல் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார். தொடர்ந்து பெட்ரோல், டீசல், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்து போராட்டம் நடத்தப்பட இருப்பதாக திருமாவளவனை தெரிவித்தார்.
பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசு குறைக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தி உள்ளதே என்ற கேள்விக்கு, மாநிலத்திற்கு வரவேண்டிய வருமானத்தை எல்லாம் மத்திய அரசு எடுத்துக்கொண்டு, பணத்தை கொடுப்பதில்லை. சட்டப்பேரவையில் கூட, மாநில அரசுக்கு கொடுக்க வேண்டிய ரூ.28 ஆயிரம் கோடியை மத்திய அரசு கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது. எனவே பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை நான் என்ன கேட்டுக் கொள்கிறேன், தமிழகத்துக்கு சேர வேண்டிய ரூ.28 ஆயிரம் கோடியை மத்திய அரசை கொடுக்கச் சொல்லுங்கள். நிச்சயமாக அடுத்தநாளே திமுக தேர்தல் வாக்குறுதிபடி வரியை குறைக்க கூறுகிறோம்.
இவ்வாறு கூறினர்.