மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயில் பயண கட்டண சலுகை வேண்டும் என்று கேரளாவைச் சேர்ந்த பினாய் விஸ்வம் எம்.பி. ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டதன் மூலம் மூத்த குடிமக்களுக்களிடம் இருந்து மட்டும் ரயில்வே துறைக்கு சுமார் 1500 கோடி ரூபாய் வருமானம் வந்ததாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

தவிர, கடந்த வாரம் சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் பேசும் போது, ரயில்வே துறை செலவு செய்யும் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 45 ரூபாய் மட்டுமே பயணிகளிடம் இருந்து கட்டணமாக பெறப்படுகிறது.

ஏற்கனவே, டிக்கெட் கட்டணம் மானியமாக வழங்கப்படுவதால் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை வழங்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியியைச் சேர்ந்த மாநிலங்கலளவை உறுப்பினரான பினாய் விஸ்வம் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு அனுப்பியிருக்கும் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாகவது :

2020 – 22 ம் ஆண்டில் மூத்த குடிமக்கள் சுமார் 7 கோடி பேர் ரயில் பயணம் மேற்கொண்டதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.

மூத்த குடிமக்களுக்கு சலுகை கட்டணம் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக பல கோடி இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் நிலை கருதி, மீண்டும் அவர்களுக்கான கட்டண சலுகையை மத்திய ரயில்வே துறை அமல்படுத்த வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கொரோனா கட்டுப்பாடுகள் என்ற பெயரில் கட்டண சலுகைகளை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக கூறி கட்டண உயர்வை அறிவித்த ரயில்வே துறை பலதரப்பட்ட மக்களும் பயணம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட இந்திய ரயில்வே துறையை கட்டண உயர்வின் மூலம் சீரழித்து வருகிறது.

கொரோனா கட்டுப்பாடுகளின் போது பயணம் மேற்கொண்ட மூத்த குடிமக்கள் பற்றிய தரவுகளை வைத்து பார்க்கும் போது கோடிக்கணக்கானோர் அதனால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது.

மத்திய அரசு உடனடியாக தலையிட்டு மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை மீண்டும் வழங்கவேண்டும் என்று பினாய் விஸ்வம் வலியுறுத்தியுள்ளார்.