சங்கரன்கோவில் கோமதி அம்மன் உடனுறை சங்கரநாராயணர் திருக்கோவில், தென்காசி மாவட்டம்.
மூலவர் : சங்கர லிங்க சுவாமி அம்மன்: கோமதி அன்னை
தல விருட்சம் : புன்னை.
தலசிறப்பு :
பார்வதியின் அம்சமான கோமதி அம்மனின் வேண்டுகோளுக்கு இணங்கி எம்பெருமான், சங்கர நாராயணராகக் காட்சி தந்த திருத்தலம். ஆடித்தபசு விழா இங்கு வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
சங்கரநாராயணர் எப்பொழுதும் அலங்காரத்துடனேயே காட்சி தருகிறார். இவருக்கு அபிஷேகம்
கிடையாது. ஸ்படிக லிங்கமான சந்திரமவுலீஸ்வரருக்கே அபிஷேகம் நடைபெறுகிறது.
இங்குப் புற்று மண்ணே பிரதான பிரசாதமாகும்.இந்த புற்று மண்ணை பூசிக்கொண்டால் பாம்பு தேள் , விஷப் பூச்சிகள் நம்மை அண்டாது என்பது நம்பிக்கை.
தலவரலாறு :
நாக அரசர்களான சங்கன், சிவபெருமான் மீதும் பதுமன் பெருமாள் மீதும் மாறாத பற்றுடையவர்கள். இருவருக்கும் சிவன் பெரியவரா, திருமால் பெரியவரா என்ற வாக்குவாதம்
ஏற்பட்டு அன்னை பார்வதியிடம் முறையிட அன்னையும் கோமதி அம்மனாக இத்தலத்தில் எம்பெருமான் சங்கர நாராயணராகக் காட்சிதரவேண்டி கடும் தவமிருந்தாள். ஒரு ஆடித்தபசு தினத்தில் ஈசன் சங்கர நாராயணராக அம்மனுக்குக் காட்சி தந்து அருளினார்.அன்னையின் விருப்பப்படி சங்கர லிங்கமாக இங்கே எழுந்தருளினார்.
காலப்போக்கில் சங்கர லிங்கத்தைப் புற்று மூடிவிட்டது. பின்னாளில் காப்பறையன் என்னும் புன்னைவன காப்பாளன் புற்றை இடித்தபோது அங்கே லிங்கம் இருப்பதையும் காவலுக்குப் பாம்பு இருப்பதையும் கண்டு அதிசயித்தான். இதுபற்றி அறிந்த பாண்டிய மன்னன் உக்கிர பாண்டியன் இந்த இடத்தில் கோவில் கட்ட முடிவு செய்து மிகப்பெரிய ஆலயத்தை நிறுவினான். சுமார் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்டது இந்த ஆலயம்.