டில்லி
நாடெங்கும் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவன படிப்புக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
அகில இந்தியத் தொழில் நுட்ப கவுன்சிலான ஏஐசிடிஇ ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,” பி இ., பி.டெக்., பி ஆர்க்., படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.79,600 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ.1,89,800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதைப் போல் டிப்ளமோ படிப்புகளுக்குக் குறைந்தபட்சமாக ஒரு செமஸ்டருக்கு ரூ.67,900, அதிகபட்சமாக ரூ.1,40,900 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எம் இ, எம் டெக்., எம்.ஆர்க்., படிக்க ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்சமாக ரூ.1,41,200, அதிகபட்சமாக ரூ.3,04,000 என்று கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதைத் தவிர 3 ஆண்டு எம் சி ஏ படிப்புக்கு குறைந்தபட்சமாக ரூ.88,500, அதிகபட்சமாக ரூ.1,94,100ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 ஆண்டு எம் பி ஏ படிப்புக்கு குறைந்தபட்சமாக ரூ.85,000, அதிகபட்சமாக ரூ.1,95,200ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கு மாதம் ரூ.1,37,189, பேராசிரியர்களுக்கு ரூ.2,60,379 என ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கல்லூரிகள் மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதைக் காரணம் காட்டி கட்டணத்தைக் குறைக்கக் கூடாது, மாணவர் சேர்க்கை குறைவாக இருந்தால், கல்வித் தரத்தை உயர்த்த முயற்சிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளது.