சென்னை
இன்று அரசுத்துறையில் உள்ள 5,529 காலி பணியிடங்களை நிரப்ப குரூப் 2 தேர்வு நடை பெற உள்ளது
தமிழகத்தில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர் உட்பட பல்வேறு பதவிகளில் உள்ள 5,529 காலி பணியிடங்கள் உள்ளன அவற்றை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலை தேர்வு இன்று தமிழகம் முழுவதும் 4,012 தேர்வு மையங்களில் நடக்கிறது.
இதில் 4.96 லட்சம் ஆண்கள், 6.82 லட்சம் பெண்கள், 48 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 11.78 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர். இவர்களில் 14,534 பேர் மாற்றுத் திறனாளிகள் ஆவார்கள்.
இது குறித்து வெளியான சுற்றறிக்கையில், ”இந்த தேர்வு கொள்குறி வினாத்தாள் முறையில் 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. இன்று காலை 9.30 முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும். தேர்வு எழுதுவோர் 8.59 மணிக்குள் தேர்வறைக்குள் வந்துவிட வேண்டும்.
தேர்வு எழுதுவோர் ஹால் டிக்கெட்டை அனைத்து பக்கங்களுடன் முழுமையாக பிரின்ட் எடுத்துவர வேண்டும். மேலும் ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை போன்ற ஏதேனும் ஒரு அடையாள அட்டையும் வைத்திருக்க வேண்டும். இத்துடன், ஹால் டிக்கெட்டில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வின் கண்காணிப்பு பணிக்காக 323 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இன்று நடக்கும் குரூப் 2 தேர்வு முடிவை ஜூன் மாத இறுதியில் வெளியிடவும், அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்குச் செப்டம்பரில் முதன்மை தேர்வு நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.