தென்காசி: குற்றாலத்தில் இந்த ஆண்டு குளு குளு சீசன் முன்கூட்டியே தொடங்கி உள்ளது. இது சுற்றுலா பயணிகளியே பெரும் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. கோடை வெயிலை தணிக்க சுற்றுலா பயணிகள் குற்றாலத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களைகட்டும். இதனை அனுபவிக்க உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள். ஆனால், இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்கியதால் தொடர்ந்து குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இப்போதே குற்றால சீசன் களைகட்டியுள்ளது. குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் நீர்வரத்து துவங்கியதால் முன்கூட்டியே சீசன் துவங்கியுள்ள நிலையில் சுற்றுலாப்பயணிகள் அருவியில் ஆனந்தமாய் குளித்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக கொரோனா தொற்று காரணமாக சுற்றுலாத் தலமான குற்றால அருவிகளில், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்தனர். இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். மேலும் இதனை நம்பி இருந்த வியாபாரிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு முன்கூட்டியே சீசன் தொடங்கி உள்ளதால், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.