திருவனந்தபுரம்: ஷவர்மா சாப்பிட்டு 17வயது இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தைத் தொடர்ந்து, மாநில சுகாதாரத்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக, கடந்த 5நாட்களில் 110 ஓட்டல்களுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்து உள்ளார்.
கேரள மாநிலம் காசர்கோடு அருகே செறுவத்தூர் பகுதியை சேர்ந்தவர் தேவநந்தா என்ற பிளஸ் 1 மாணவி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்குள்ள ஒரு ஓட்டலில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டதால் திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்தார். அவருடன் அதே ஓட்டலில் ஷவர்மா சாப்பிட்ட மேலும் 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம் ஆகிய அறிகுறிகள் காரணமாக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்த விவகாரம் கேரளா மாநிலம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. உயிரிழந்த தேவநந்தாவின் உடல் கண்ணூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் அறிக்கையில் தேவநந்தாவின் மரணத்திற்கு ஷிகெல்லா பாக்டீரியா தான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன், உணவுபாதுகாப்பு துறை, சுகாதாரத்துறை அதிரடியாக களமிறங்கியது. இதில், ஷவர்மா விற்பனை செய்த கடை உரிய அனுமதி இன்றி இயங்கி வந்தது விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது. கடை மேலாளர், ஷவர்மாவைத் தயாரித்த இருவர் மற்றும் இணை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்த, மாநிலம் முழுவதும் உள்ள உணவகங்களில் அதிரடி சோதனை நடத்த கேரளா சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் உத்தரவிட்டார். போதிய சுகாதார வசதிகள் இல்லாத ஓட்டல்கள் சீல் வைக்க அறிவுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகிறனர்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மாநில சுகாதாரத்துறை மந்திரி வீனாஜார்ஜ், கேரளா முழுவதும் ஓட்டல்கள், அங்கு தயாரிக்கப்படும் உணவு வகைகள் சுகாதாரமாக உள்ளதா? என்பது பற்றி அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள். இதில் தரமான உணவு பொருட்கள் வழங்காத ஓட்டல்கள் சீல் வைக்கப்படுகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் 110 ஓட்டல்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 347 ஓட்டல்கள் மற்றும் நிறுவனங்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.