இந்து இளைஞர் மாநாடு என்ற பெயரில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஏப் 28 முதல் மே 1 வரை மாநாடு நடைபெற்றது.
கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் துவக்கி வைத்த இந்த நிகழ்ச்சியில் இந்து மத அடிப்படைவாதிகள் பலரும் கலந்து கொண்டு பேசினர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய துர்காதாஸ் சிசுபாலன், “கேரளாவில் இருந்து அரபு நாடுகளுக்கு செல்லும் செவிலியர்கள் அங்குள்ள இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு பாலியல் அடிமைகளாக உள்ளனர்” என்று பேசினார்.
அவரது இந்தப் பேச்சு சர்ச்சையானது மேலும் கத்தார் உள்ளிட்ட பல்வேறு அரபு நாடுகளில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியதோடு, செவிலியர்கள் முன் அவர் ஒரு சொட்டு தண்ணீருக்காக ஏங்க வேண்டிய காலம் வரும் என்றும் விமர்சனத்துக்கு உள்ளானார்.
One of the nurses with tears said " There will be a day when he will be begging in front of us for a drop of water". Hope that day comes.
— Lt Cdr Gokul (R) (@gokulchan) May 5, 2022
கேரள அரசின் கலாச்சாரத்துறையின் கீழ் இயங்கிவரும் மலையாளி மிஷன் அமைப்பின் கத்தார் பிரிவு பிரதிநியாக உள்ள துர்காதாஸ் சிசுபாலன் டோஹா-வில் உள்ள நரங் ப்ரொஜெக்ட்ஸ் எனும் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
இவரது இந்த பேச்சு தொடர்பாகவும் மற்றும் இஸ்லாமியர்களின் கடைகளில் இந்துக்கள் பொருட்கள் ஏதும் வாங்கக்கூடாது என்று அந்த மாநாட்டில் பேசியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி கேரள காவல்துறையில் பல்வேறு அமைப்புகள் புகாரளித்துள்ளன.
இந்நிலையில், இந்த வெறுப்பு பேச்சு காரணமாக நரங் ப்ரொஜெக்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து துர்காதாஸ் சிசுபாலன் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் சமீபகாலமாக இந்து மாநாடு என்ற பெயரில் வெறுப்பு மற்றும் வன்முறையை தூண்டும் பேச்சுக்கள் அதிகரித்து வரும் நிலையில் கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் இதேபோன்ற சர்ச்சை பேச்சுக்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.